பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியூஸ்18-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக, ‘பசுமை நோக்கம்’ குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ஒவ்வொரு துறையிலும், புதைபடிவ எரிபொருளைச் சார்ந்து இருப்பதில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எரிபொருளுக்கு மாறுவதற்கு பட்ஜெட்டில் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மேலும், பசுமை நோக்கி மாறுவது மிகவும் முக்கியம்; புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவது மிக மிக முக்கியம் என நிதியமைச்சர் அழுத்தமாக தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, நிதித்துறை, வளர்ச்சி மற்றும் இளைஞர் சக்தி ஆகியவற்றுடன் ஏழு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக பசுமை வளர்ச்சி குறித்து பட்டியலிட்டார். இது, காலநிலை நடவடிக்கைக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்ததாக கூறப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பசுமை எரிபொருள், பசுமை எரிசக்தி, பசுமை விவசாயம், பசுமை இயக்கம், பசுமை கட்டிடங்கள், பசுமை உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருளாதார துறைகளில் ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதற்கான கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்க உதவுவதோடு பெரிய அளவிலான பசுமை வேலை வாய்ப்புகளை வழங்குகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
லடாக்கில் இருந்து 13 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொள்முதல் செய்து, ஒருங்கிணைக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என அதற்கு ரூ. 20,700 கோடி ஒதுக்கப்பட்டது. 4,000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக நிதியுதவியுடன் ஆதரிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிலையான செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பசுமை திட்டத்தை அறிவிக்கும் அரசின் திட்டங்களையும் பட்ஜெட் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.