Home /News /business /

மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் அனுமதிக்கப்பட வாய்ப்பு

மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் அனுமதிக்கப்பட வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், அனைத்து சர்வதேச விமான சேவைகளை அனுமதிப்பதற்கான முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கொரோனா பெருந்தொற்று காலம் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் தொடங்கியது முதல், உலக அளவில் இயல்பு வாழ்க்கை முடங்குவதும், மீள்வதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அனைத்து சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கொரோனா மூன்றாம் அலை சற்று ஓயத் தொடங்கியுள்ள நிலை மற்றும் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்பட்டிருக்கும் சூழல் ஆகியவற்றை பரிசீலனை செய்து, மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து சர்வதேச விமான சேவைகளை தொடங்கலாம் என அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது. சுகாதாரத் துறை, விமானப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தற்போதைய சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அண்மையில், சர்வதேச பயணங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில், ‘அபாயம் உள்ள நாடுகள்’ என்ற பிரிவை மத்திய அரசு நீக்கியிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், அனைத்து சர்வதேச விமான சேவைகளை அனுமதிப்பதற்கான முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால், கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமைக்ரான்’ தொற்று திடீரென பரவத் தொடங்கியதன் காரணமாக அந்த முடிவை ஒத்திவைக்க நேர்ந்தது. இதனால், பணி நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் அவதி அடைந்தனர்.

தற்போதைய சூழலில், பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் வழக்கமான கமர்சியல் சர்வதேச விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ஏர் பப்புள்’ ஒப்பந்தம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சர்வதேச விமான சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன. சுமார் 35 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா, கத்தார், அரபு அமீரக நாடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இணைந்துள்ள குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும்.

தற்போது, உலகெங்கிலும் கொரோனா சூழல் சற்று சீரடைந்து வருவதன் காரணமாக பல்வேறு நாடுகளும் பயணங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றன. அந்த வகையில், இந்திய அரசும் சர்வதேச விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக தீவிரமான பரிசீலனையை மேற்கொண்டு வருகிறது.

Also read... விமானங்களில் விரைவில் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட் வசதி!

இதற்கிடையே, உள்நாட்டு விமானச் சேவைகள் கொரோனாவுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையில் 80 சதவீதம் வரை இயக்கப்படுகின்றன. கொரோவுக்கு முன்பு நாளொன்றுக்கு 2,800 உள்நாட்டு விமானச் சேவைகள் இயங்கி வந்த நிலையில், அதற்போது 2,058 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Flight travel

அடுத்த செய்தி