பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. சில சமயங்களில், பழைய திட்டங்களையே விரிவாக்கம் செய்து பொதுமக்களுக்கு பலன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக, விழிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இதுபோன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது வழக்கம்.
தற்போதைய சூழலில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், ரேஷன் பொருள், நலிவடைந்தோருக்கு பொருளாதார உதவி என்ற வகையில் எண்ணற்ற சமூக நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான திட்டங்கள் என்பது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்த மாதத்தில் சிறப்புக்குரிய மாதம் ஒன்றை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கொண்டாட உள்ளது. அதாவது மார்ச் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் இந்த சிறப்பு வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.
யாருக்கு நிதியுதவி
சிறப்பு நடவடிக்கையின் கீழ், ‘ஒரு ஓய்வூதியத்தை தானம் செய்யுங்கள்’ என்ற பிரசாரத்தை முறைசாரா பிரிவில் உள்ள தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தனக்கு உதவியாளராக உள்ள வீட்டு பணியாட்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் போன்றவர்களுக்காக ஓய்வூதியம் பெறுவதற்கான ப்ரீமியம் தொகையை தானமாக வழங்கலாம்.
Also Read : அதிக வட்டி வழங்கும் அஞ்சல் நிலையத்தின் 3 சேமிப்புத் திட்டங்கள்!
பிரதமரின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். தனது தோட்டத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, ஓய்வூதியத்திற்கான ப்ரீமியத் தொகையை நன்கொடையாக வழங்கி, இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திட்டத்தின் பலன் என்ன? இதில் யாரெல்லாம் பலன் அடையலாம்
முறைசாரா பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 18 முதல் 40 வயது வரையிலான தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பலன் அடையலாம். தற்போதைய சூழலில், இந்த திட்டத்தில் 29 வயது கொண்ட நபர் ஒருவர் சேருகிறார் என்றால், அவர் ப்ரீமியம் தொகையாக 60 வயது வரையிலும் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். அதேபோன்று மத்திய அரசும் அதன் பங்களிப்பு தொகையாக ரூ.100 செலுத்தி வரும்.
பயனாளர் 60 வயதை எட்டிய பிறகு, அவருக்கான ஓய்வூதியமாக அரசு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கும். வீட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஓய்வுகால பாதுகாப்பிற்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்களுக்கான மாதாந்திர ப்ரீமியம் தொகையை உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் செலுத்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.