ஹோம் /நியூஸ் /வணிகம் /

கூகுள் நிறுவனத்துக்கு அரசிடம் இருந்து நெருக்கடி - காரணம் இது தான்!

கூகுள் நிறுவனத்துக்கு அரசிடம் இருந்து நெருக்கடி - காரணம் இது தான்!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

சில மாதங்களுக்கு முன்பே இதைப் பற்றி விவாதிக்கப்பட்டு கூகுள் தன்னுடைய பிளே ஸ்டோர்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  மொபைல் இணையம் என்று எல்லாமே நம்முடைய அன்றாடத் தேவையாக மாறிவிட்டது. குறிப்பாக எந்த தகவல் வேண்டுமானாலும் கூகுள் தேடலை தான் முதலில் பயன்படுத்துவோம். அது மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கூகுள் பிளே ஸ்டோர் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

  பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வகையில் பல்வேறு செக்யூரிட்டி அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அரசு பலவிதமான விதிமுறைகளை உருவாக்கி, தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் அதை அமல்படுத்தி வந்த போதிலும், முறைகேடான ஒரு சில விஷயங்களால் பொதுமக்கள் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள்.

  அதில் ஒன்றுதான் கடன் வழங்கும் செயலிகள். சமீபத்தில் இது சம்பந்தமாக அரசாங்கம் கூகுள் நிறுவனத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்குமாறு தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு நபரின் வருமானம், கடன் கட்டும் திறன், அவருடைய கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில்தான் கடன் வழங்கப்படும்.

  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து குறிப்பாக கொரோனா தொற்று ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே எக்கச்சக்கமான மொபைல் செயலிகள் கடன் வழங்கும் செயலிகள் ஆக செயல்பட்டு வருகின்றன. வங்கிகளும் செயலிகளுடன் கூட்டிணைந்து கடன் வழங்குகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ₹5000 முதல் பல லட்சம் ரூபாய் வரை இன்ஸ்டன்ட்டாக அவரவர் வருமானத்திற்கு ஏற்றவாறு கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை புற்று போல பெருகி வந்துள்ளன. எனவே இதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் மற்றும் இந்த செயலிகளின் எவ்வளவு உண்மையானவை என்பதை சரிபார்க்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. எனவே கூகுள் நிறுவனத்திற்கு இத்தகைய டிஜிட்டல் லோன் வழங்கும் செயலிகள் செயலிகளை சரிபார்க்கும் புதிய விதிமுறைகளை விதிக்குமாறு இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  Also Read : இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

  கூகுள் ஒரு தொழில்நுட்ப நிறுவனம், அது மட்டுமல்லாமல் கூகுள் நிறுவனத்தின் எந்த சேவையுமே இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வராது என்ற போதிலும், கடந்த சில மாதங்களாக மத்திய வங்கி நடத்திய பெரும்பாலான கூட்டத்திற்கு கூகுள் நிறுவனமும் அழைக்கப்பட்டது. கடன் வழங்கும் முறைகேடான செயலிகளை எப்படி தடுப்பது மற்றும் அவற்றை எவ்வாறு நீக்குவது, கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் கூகுள் நிறுவனத்தையும் அழைத்தது.

  முறைகேடான, சட்டபூர்வமாக செல்லுபடியாகாத கடன் வழங்கும் அனைத்து செயலிகளையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய செயலிகள் மிக அதிக அளவுக்கு வட்டி விதிப்பதோடு மட்டுமல்லாமல் கடனை திருப்பி வழங்கும் செயல்பாடுகளில் முறைகேடாக பொதுமக்களை தீவிரமாக பாதிக்குமாறு நடந்து கொள்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மத்திய வங்கி விதித்துள்ள எந்த விதிமுறைகளின் கீழும் இவை வரவில்லை மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதையும் வலியுறுத்தியது.

  சில மாதங்களுக்கு முன்பே இதைப் பற்றி விவாதிக்கப்பட்டு கூகுள் தன்னுடைய பிளே ஸ்டோர் டெவலப்பிங் புரோகிராம் பாலிசியில் நிதி சம்பந்தப்பட்ட சேவைகளை மாற்றி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டெம்பர் 2021, அதாவது ஓராண்டுக்கு முன்னரே பர்சனல் லோன் வழங்கும் செயலிகளுக்கான விதிமுறைகளும் தனியுரிமை கொள்கையும் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த பிளே ஸ்டோர் பாலிசி தேவைகளுக்கு இணங்காத இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து தடை செய்து கூகுள் நிரந்தரமாக நீக்கியது என்று கூகுள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இயங்கி வரும் செயலிகளும் இந்த கொள்கையை மீறும் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் உடனடியாக அவை தடை செய்யப்படும் என்றும் நிறுவனம் சார்பாக அறிக்கை வெளியானது.

  இந்தியாவில் டிஜிட்டல் வழியில் கடன் வழங்கும் சந்தை 2021-2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.2 பில்லியன் டாலர்கள் மதிப்பை எட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் முறைகேடான வழிகளில் எவ்வாறு இவ்வளவு செயலிகள் இயங்கி வருகின்றன என்பது இன்றளவும் கேள்விக்குறியாக இருக்கிறது.

  கடன் வழங்கும் செயலிகள் மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு கீழ் தான் வர வேண்டும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எனவே இதை சரிபார்க்கும் பொறுப்பு கூகுளுக்கு இருக்கிறது என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூகுள் செயலிகள் வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் சேனல்கள் வழியாகவோ கடன் வழங்கும் செயலிகளின் செயலிகள் பெருகுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கூகுள் நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது.

  இதை போன்ற செயலிகள் மீது வரும் புகார்களில் கூகுள் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் தற்பொழுது கூகுள் தன்னுடைய பாலிசியை மாற்றிக் கொண்ட பிறகு, தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார்கள் மீது உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதை குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக பாதுகாப்பாக இருக்கும் வகையில் அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் அனுமதி அளிக்கப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Google, Loan app