இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாக டிஜிட்டல் வாடிக்கையாளர்களை கூடுதலாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மலிவு விலை 4 ஜி செல்போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள கூகுள் இந்தியாவின் தலைசிறந்த தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.73 சதவீத பங்குகளை 33,737 கோடிக்கு வாங்கியது. இதனைத் தொடர்ந்து கூகுள் தனது டிஜிட்டைசேஷன் நிதியிலிருந்து 700 மில்லியன் நிதியை, அதாவது இந்திய மதிப்பில் 5,260 கோடியை நேரடியாக முதலீடு செய்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இதனையடுத்து பாரத் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல வருட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மீதமுள்ள 300 மில்லியன் டாலர் (2 ஆயிரத்து 250 கோடி) தொகையை வழங்க உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.734 என்கிற கணக்கில் 71,176,839 பங்குகளை கூகுள் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக இணைந்து இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை மற்றும் கிளாவுட் சேவையை மேம்படுத்துவதிலும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
கூகுள் மற்றும் அதன் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஏர்டெல் ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக அளவிலான ஸ்மார்ட் போன் பயனாளர்களை அதிகரிக்கவும், புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் சேவை செய்யும் திறந்த தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதற்கு இரு நிறுவனங்களும் உறுதி கொண்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. உலகின் மதிப்புமிக்க ஐடி நிறுவனங்களின் பட்டியலில் TCSக்கு 2ம் இடம்!!
மேலும் ஏர்டெல் மற்றும்
கூகுள் இணைந்து 5ஜி மற்றும் பிற தரநிலைகளுக்கான இந்தியாவின் நெட்வொர்க் டொமைன் பயன்பாட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் ஏற்கனவே கூகுளுடன் இணைந்து இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட் போன், 5ஜி சேவை, இதர முக்கிய டெலிகாம் சேவைகளை வழங்க உள்ளது. தரமான நெட்வொர்க்கை வழங்க கூகுளின் நெட்வொர்க் மெய்நிகராக்க தீர்வுகளின் விரிவாக்கத்தை அதிகரிக்கவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தன. ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 1.68 சதவீதம் அதிகரித்து 719.05 ரூபாய் வரையில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.