கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக நேற்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, சவரன் 37 ஆயிரத்தை கடந்தது. பின்னர் மாலையில் சற்று சரிந்து, கிராம் 4610 ரூபாயாகவும், சவரன் 36, 880 ரூபாயாகவும் விற்பனையானது.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர், மார்ச் 24ம் தேதியில் இருந்து தற்போது வரை தங்கம் சவரனுக்கு 5,415 வரை அதிகரித்துள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை சவரனுக்கு 7,152 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்தியா சீனா இடையேயான பதற்றமான சூழல், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதாலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால், விலை உயர்ந்தாலும் வேறு வழியின்றி வாங்குவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.