ஒரு வருடத்திற்குப் பிறகு அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிப்பதை உறுதி செய்துள்ளது மத்திய அரசு.
2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வர்த்தக போரை நடத்தி வருகிறார்.
அதில் ஒரு கட்டமாக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட சில பொருட்கள் மீது அமெரிக்க அரசு 25% வரி விதித்தது.
அமெரிக்காவின் அந்த முடிவுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீது வரி விதிப்பதாக இந்தியா அறிவித்தது.
அதை கண்டித்த டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் இரண்டு சக்கர வாகனங்கள் மீது இந்தியா 100 சதவீத வரியை வசூலிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்திய அரசும் அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை தள்ளி வைத்து பேச்சுவார்த்தையில் இறங்கியது. அதில் ஒரு முடிவாக அமெரிக்க வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக இந்திய அரசு குறைத்தது.
ஆனாலும் அதில் சமாதானம் அடையாத அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ஜூன் 5-ம் தேதி முதல் நிறுத்தியது.
இதனை அடுத்தாவது அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்திய அரசு உயர்த்துமா என்று கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீதன வரி விதிப்பை ஜூன் 16-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, வால்நட், சுண்டல், பயறு உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதலாக 2026 கோடி ரூபாய் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மேல் வரி உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.