Nirmala Sitharaman Exclusive Interview: இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதி செய்கிறேன் என்று கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெட்வொர்க் 18 தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-
ஏற்ற இறக்கம் இல்லாத நிலையான வரி விதிப்பு முறைகளை வழங்குவது என்பது சாத்தியம்தான். உறுதித் தன்மை இல்லாத விஷயங்களை நாங்கள் வரி விதிப்பு முறைகளுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. வரி தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயலாற்றிய யாரும் பாதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க :
Budget 2022: நிர்மலா சீதாராமனின் 10 முக்கிய அறிவிப்புகள்.. 5ஜி முதல் டிஜிட்டல் கரன்சி வரை...
பண வீக்கத்தைக் கண்டு அனைத்து நாடுகளும் அச்சம் கொள்கின்றன. இது சர்வதேச பிரச்னை. ஒரு நாட்டின் திட்டமிடுதலை இந்த பணவீக்கம் கடுமையாக பாதிக்கிறது. இதுபற்றி நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவை பொருத்தளவில் அத்தியாவசிய உணவு பொருட்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள் உள்ளிட்டவற்றை இன்றளவும் இறக்குமதி செய்து வருகிறோம். நம் நாட்டில் போதுமான பயிர் வகைகள், எண்ணெய் தயாரிப்பதற்கு தேவையான பயிர்கள் விளையவில்லை.
ரிஸ்க் எடுப்பவர் என்று என்னை அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு நிதியமைச்சராக நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. ஆனால், இந்திய பொருளாதாரம் மோசமான பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டது. இதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.
இதையும் படிங்க :
Exclusive : 'அனைத்து மாநிலங்களும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்' - நிர்மலா சீதாராமன்
ஏர் இந்தியா விவகாரம் என்பது சற்று சிக்கலான விஷயம். அதனை கையாளுவதற்கு தொடர் முயற்சிகளும், பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமாக இருந்தது. எல்.ஐ.சி. IPO திட்டங்கள் நல்லபடியாக உள்ளன. இதுதொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள் இந்த ஆண்டே நடைமுறைக்கு வந்து விடும்.
அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்காக பொது நிதி செலவிடப்படுவதுதான் சரியானதாக அமையும். பொருளாதார வலுவாக அமைந்தால், நாம் செலவிடும் நிதி நமக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருளாதாரத்தில் பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அன்னிய நேரடி முதலீடு வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.