ஒரு காலத்தில் பண்டமாற்ற முறையில் உலக அளவில் வர்த்தகங்கள் நடைபெற்று வந்தது. அதற்கு அடுத்த படியாக ஒவ்வொரு நாடுகளும் நாணயங்களையும், அதன் வளர்ச்சியாக கரன்சிகளையும் அச்சடித்து அதன் மதிப்பில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது வா்த்தக பரிமாற்றம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. காகித கரன்சிகளை குறைக்கும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகம் செய்து அதன் மதிப்பில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
ஆனால் அந்த பரிவர்த்தனை எந்த அளவிற்கு வெற்றிகரமாகவும் கையாள எளிதாகவும் இருக்கும் எனத் தெரியாது. இந்திய அரசு கூட டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. இப்படி டிஜிட்டல் பரிவர்த்தனையின் இன்னொரு முகம் தான் கிரிப்டோ கரன்சி. நாம் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பை டிஜிட்டல் வடிவாக்கி அதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தான் கிரிப்டோ கரன்சி என்பதற்கான எளிதான விளக்கமாக இருக்க முடியும். அந்த கிரிப்டோ கரன்சியால் தான் நாம் அடுத்த பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போகிறோம் என்ற எச்சரிக்கை வந்திருக்கிறது.
எச்சரித்திருப்பது யார் தெரியுமா? இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ். மும்பையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது தான் சக்திகாந்த தாஸ் இப்படி பேசியிருக்கிறார். கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்தவித அடிப்படை மதிப்பும் இல்லை என்பதால் அதன் புழக்கம் நம்முடைய பொருளாதாரத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
அண்மையில் FTX எனப்படும் கிரிப்டோ காயின் பரிவர்த்தனை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்ததும், அதனால் பல முதலீட்டாளர்கள் கோடிக் கணக்கில் நட்டத்தை சந்தித்ததையும் தனது உரையில் சுட்டிக் காட்டிப் பேசியுள்ள சக்திகாந்த தாஸ், இந்த நிகழ்வு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு என்ன என்பதை நமக்கு காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
கிரிப்டோ பரிவர்த்தனையை முறைப்படுத்தி விட்டு அந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என பலரும் சொல்வதை சுட்டிக் காட்டிய சக்திகாந்த தாஸ், அடிப்படை மதிப்பே இல்லாத வெறும் பகட்டான கிரிப்டோ பரிவர்த்தனை நமக்கு ஏற்றதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார். அமைப்பு முறையையே புறக்கணித்து விட்டு நடைமுறைக்கு வந்துள்ள கிரிப்டோ பரிவர்த்தனையை எப்படி முறைப்படுத்துவது என்றும் கேள்வி எழுப்பியுள்ள சக்திகாந்த தாஸ், கிரிப்டோம கரன்சிகள் ரிசர்வ் வங்கியாலோ, முறையான பொருளதாரா அமைப்புகளாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டது ஒன்று அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த கிரிப்டோ பரிவர்த்தனை பயன்பாட்டை தனியார்களுக்கு அதிக அளவில் அனுமதிப்பது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Crypto currency, Cryptocurrency