2021ம் ஆண்டு எந்தெந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கும் என்றும் எந்தெந்த முதலீடுகள் கைகொடுக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
2020 ஆண்டு தொடங்கும்போது பொருளாதார ரீதியாக மிகச்சவாலான ஆண்டாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா தொற்று பரவலால் முதல் காலாண்டில் அனைத்து துறைகளும் தேக்கம் அடைந்தது. அதன் பின், இரண்டாவது, மூன்றாவது காலாண்டில் ஓரளவு தொழில்கள் இயங்கத்தொடங்கி, அக்டோபர் மாதத்திற்கு பின் பரவலாக 80 சதவிகிதம் பொருளாதாரம் மெல்ல மீண்டு எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொழில் ஆலோசகர் நாகப்பன் கூறியதாவது: ரியல் எஸ்டேட் துறை 2020ம் ஆண்டு நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. வரக்கூடிய 2021ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் சார்ந்த துறைகள் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை அலுவலகங்கள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதன் எதிரொலியாக குடியுருப்பு தேவைகள் அதிகரிக்கும்.
சிக்கனமாக இருப்பதை நடுதட்டு மக்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் 10 ஆண்டு தேக்க நிலைக்கு பின் ரியல் எஸ்டேட் துறை பலனை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்புறம், கிராமப்பகுதி என பரவலாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் விலை அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு.
முதலீட்டாளர்களை பொறுத்தவரை 10 ஆண்டுகளாக பங்குசந்தை நல்ல லாபம் தருகிறது. தங்கம் ஒன்றரை ஆண்டுகளாக நல்ல முன்றேற்றம் அடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். தங்கத்தை பொறுத்தவரை அதன் ஏற்றம் முடிந்துஉவிட்டது. இனி வரும் நாட்களில் சிறிய ஏற்றம் இறக்கம் இருக்கும். பக்கவாட்டு நகர்தலில் இருக்கும். அதேபோல் பங்குசந்தையை பொறுத்தவரை பக்கவாட்டு நகர்தலிலோ அல்லது இறக்கத்திலோ இருக்கும். ரியல் எஸ்டேட் துறை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய ஏற்றம் இருக்கும்.
Also read... Gold Rate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால்
ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. இதற்கு காரணம் கண்டைனர் ப்ரைட் கண்டனங்கள் அதிகமாக இருப்பது. இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல், வங்கிகளை பொறுத்தவரை, இரண்டு காலாண்டுகளில் வாராக்கடன் பிரச்சனை வரவில்லை. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி மாதத்தவணை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதனால் வாராக்கடனாக வகைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மூன்றாம் காலண்டு முடிவுகள் வரும் போது, ஏப்ரல் மாதத்தில் இதன் முழுதாக்கம் தெரிய வரும். இதை வங்கிகள் எப்படி சமாளிக்க உள்ளது? இதை பொதுத்துறை வங்கிகள் எப்படி எதிர்கொள்ளும் என்பது கவனிக்கப்பட வேண்டும். இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், 2020ல் சுற்றுலா, கல்வி மற்றும் போக்குவரத்து சார்ந்த அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மருத்துவத்துறை வேகமாக இயங்கி வருகிறது. வாகன விற்பனை, தகவல் தொழில்நுட்பத்துறை இப்பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளது. அன்றாட கூலிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் குறைந்த கூலி தான் கிடைக்கிறது.
அதேவேளையில், கொரோனா தாக்கம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பதும் முக்கியமானது. சர்வதேச அளவில் தேக்கநிலை தொடர்ந்தாலும், கடந்தாண்டை விட வரக்கூடிய ஆண்டு மோசமானதாக இருக்காது எனவும், பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், பாதிப்பை சரிசெய்யக்கூடிய ஆண்டாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.