15-வது நிதிக்குழு என்ன கூறுகிறது? தமிழகத்துக்கு நிதி குறையுமா? - பொருளாதாரப் பேராசிரியர் விளக்கம்!

15-வது நிதிக்குழு என்ன கூறுகிறது? தமிழகத்துக்கு நிதி குறையுமா? - பொருளாதாரப் பேராசிரியர் விளக்கம்!
பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம்
  • News18
  • Last Updated: February 3, 2020, 4:38 PM IST
  • Share this:
15-வது நிதிக்குழு என்ன கூறுகிறது, தமிழகத்துக்கு நிதி குறையுமா என்பது குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு வசூல் செய்யும் மொத்த வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களும் பிரித்து எடுத்துக் கொள்ளும். அப்படி மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எவ்வளவு, அதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும்,  எந்த அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பதை நிதிக்குழு முடிவு செய்து கூறும்.

வரப்போகும் 15-வது நிதிக்குழுவில் வரி வருவாயில்  மத்திய அரசிடமிருந்து  மாநிலங்களுக்கு வழங்கப்படுவது 42% லிருந்து 41 % ஆக குறைக்கப்படவுள்ளதாக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்இடைக்கால அறிக்கை கூறுகிறது.


இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகப் பொருளாதார துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் கூறுகையில், "வெர்டிகல் ஷேர் ( vertical share) எனப்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படும்  நிதி குறைக்கப்படுகிறது. இதனால் எல்லா மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

14-வது நிதிக்குழுவில் 42% வழங்கப்படுவதாக கூறினாலும் உண்மையில் கிடைத்தது என்னவோ 33 % தான். அதாவது 8 லட்சம் கோடி ரூபாய் தான். ஏனென்றால் கல்விக்கு, சுகாதாரத்துக்கு என மத்திய அரசு போடும் செஸ் வரி இதில் கழிக்கப்படுகிறது.

இந்த செஸ் 100% மத்திய அரசுக்கு செல்லும். இதனால் தான் செஸ் எப்போதும் குறைக்கப்படாமல் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. ஆனால் மற்ற வரிகள் குறைக்கப்படுகின்றன. அவற்றின் இழப்பை மாநிலங்களும் தாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக கார்ப்பரேட் வரி ஒன்றரை லட்சம் கோடி குறைக்கப்பட்டால் அதன் இழப்பை தமிழ்நாடும் சந்திக்க நேரிடும்.மேலும் 33% என்பது கூட திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 30% ஆக குறைந்துவிட்டது. மத்திய அரசு திட்டமிட்ட டி வரி வசூல் நடைபெறாததால் இது குறைந்துவிட்டது என கூறுகிறது. மத்திய அரசு தனது பொருளாதாரத்தை சரியாக திட்டமிடாததால் தமிழகத்துக்கு 6,123 கோடி ரூபாய் நேரடி இழப்பாகும்.

மாநிலங்களுக்கு தரப்படும் 41% வரி மாநிலங்களுக்குள் எப்படி பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதிலும் சிக்கல் உள்ளது. இதில் தனி மனித வருவாய்க்கு 50% முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதாவது தனி மனித வருவாய் குறைவாக உள்ள மாநிலங்களுக்கே அதிக தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தனி மனித வருவாயில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு, அதன் காரணமாகவே வரித் தொகை கிடைப்பதில்லை’ என்றார்.

14-வது நிதிக்குழுவில் மற்ற காரணிகள் மக்கள் தொகை, நிலபரப்பு, வனப்பகுதி ஆகியவை ஆகும். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை விடுத்து 2011 கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு நிதி வழங்கப்படவுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக தொகை என நிர்ணயம் செய்யப்படுகிறது. 1971-க்கு பிறகு தமிழ்நாடு மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டது. எனவே அந்த அடிப்படையில் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால் தமிழகத்துக்கு குறைவாக தான் கிடைக்கும்.

"வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு அவர்களின் வளர்ச்சியையே காரணம் காட்டி குறைவாக நிதி தருவது சரியல்ல. வளர்ச்சிக்கான நிதி, கட்டமைப்பு, தொழில் முதலீடுகள் பெறுவது என பல தேவைகள் வளர்ந்த மாநிலங்களுக்கு இருக்கும். எனவே வரி நிர்வாகம், வரி வருவாய் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

12-வது நிதிக்குழுவில் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே அனைத்து மாநிலங்களுக்கும் என ஒதுக்கப்பட்ட 8 லட்சம் கோடி ரூபாயில் தமிழகத்துக்கு 4% மட்டுமே நிதி கிடைத்தது.

வளர்ச்சியைடாத மாநிலங்களுக்கு தரப்படும் நிதியை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என மதிப்பீட்டை நிதிக்குழு நடத்த வேண்டும். எத்தனை ஆண்டுகளுக்கு வளர்ச்சியைடாதவர்களாகவே இருப்பார்கள்?" என்கிறார்.

Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்