ஹோம் /நியூஸ் /வணிகம் /

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்ன?

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால் இந்த திட்டத்தில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மத்திய அரசின் செல்வ மகள் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இந்த திட்டத்தை நீண்டகால முதலீடாக பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். எதனடிப்படையில் இப்படி கூறுகிறார்கள்? என இங்கு காண்போம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi yojana)

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால் இந்த திட்டத்தில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதனால், பெற்றோர்களும், நீண்டகால முதலீட்டை விரும்புபவர்களும் இந்த திட்டத்தை சிறந்த முதலீட்டு திட்டமாக தேர்வு செய்தனர்.

வட்டி விகிதம்:

மூத்த குடிமக்கள் திட்டத்தில் 7.4 விழுக்காடு வட்டியும், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் 7.1 விழுகாடு வட்டியும் கொடுக்கப்படுகின்றன. இந்த இரு திட்டங்களை ஒப்பிடுகையில் செல்வமகள் திட்டத்தில் 7.6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படுகிறது. முதிர்வு காலமான 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் சேமிப்பு தொகையில் இருந்து 3 மடங்கு தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் மகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கிக்கொள்ளலாம். மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால், திட்டம் முதிர்வு காலத்தை எட்டியவுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் பெறுவார். இந்த சேமிப்பு தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கிறது.

நீண்டகால முதலீடுக்கு உகந்ததா?

செல்வமகள் திட்டத்தில் மற்ற திட்டங்களை ஒப்பிடும்போது கூடுதலாக வட்டி விகிதங்கள் கொடுத்தாலும், நீண்ட கால முதலீட்டை கருத்தில் கொள்ளும்போது சிறந்த தேர்வாக இந்த திட்டம் இல்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், ஒவ்வொரு நிதியாண்டிலும் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றுவதற்கான வாய்ப்பு இதில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும், பங்குசந்தைகளை பற்றி அறியாதவர்கள் மட்டுமே சுகன்யா சம்ரிதி யோஜனாவை தேர்தெடுப்பார்கள் எனவும் கூறியுள்ளனர். 

Also read... உங்கள் சேமிப்பை அதிகரிக்க அருமையான 5 வழிகள் இதோ...!

நீண்டகால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஈக்விட்டி (Equities) சிறந்த தேர்வு என தெரிவிக்கின்றனர். முழுமையாக செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்யாமல், அதில் சிறு தொகையை முதலீடு செய்துவிட்டு மீதித்தொகையை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். செல்வமகள் திட்டம் முதிர்வு காலத்தை நெருங்கும்போது அதில் முதலீட்டை அதிகப்படுத்தி, ஈக்விட்டியில் முதலீட்டை குறைக்கலாம் என யோசனை தெரிவிக்கின்றனர்.

மேலும்,செல்வ மகள் திட்டத்தில் சேமிக்கும் பணத்தை பெண் குழந்தை 10ம் வகுப்பு முடித்திருந்தாலோ அல்லது 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் மட்டுமே எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு முடித்த பெண் குழந்தைகள் சேமிப்பு தொகையில் 50 விழுக்காடு மட்டுமே எடுக்க முடியும் என்பதையும் நீண்டகால முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குசந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Personal Finance