உள்நாட்டு விமானக் கட்டணம் ரூ.5,600 வரை உயர்கிறதா?

விமானக் கட்டணம்

நாடு முழுவதும் விமானக் கட்டணம் அதிகபட்சமாக 5,600 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • Share this:
உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பினை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் விமானக் கட்டணம் அதிகபட்சமாக 5,600 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு விமான வழித்தடங்களில் பயணிக்கும் விமானங்கள் அவை சென்றடைய ஆகும் நேரத்தை கணக்கிட்டு 7 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பயண நேரம் 40 நிமிடங்களுக்கு கீழ் முதல் மூன்று முதல் மூன்றரை மணி நேரங்கள் வரை இவை 7 வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா பரவலால் விமானங்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் விமானக் கட்டணங்களை வரைமுறைப் படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கையை கடந்த ஆண்டு DGCA மேற்கொண்டது.

இந்த நிலையில் குறைந்த பட்ச விமானக் கட்டண வரம்பில் 10%-ம் அதிகபட்ச கட்டண வரம்பில் 30 சதவீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் குறைந்தபட்சமாக ரூ.200 முதல் அதிகபட்சமாக 5,600 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிகிறது.

உதாரணமாக டெல்லி - மும்பை வழித்தடத்தில் முன்னர் விமானக் கட்டணம் ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை இருந்தது. இனி கட்டணமானது ரூ.3,900 முதல் ரூ.13,000 வரை இருக்கும். (இதில் விமான நிலைய கட்டணம், ஜி.எஸ்.டி ஆகியவை சேர்க்கப்படவில்லை).

விமான எரிபொருளின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விமான போக்குவரத்து அடையும் வரையில் இந்த விமானக் கட்டண உயர்வு நீடிக்கும் என கூறப்படுகிறது.

தற்போது பயணிகளில் இருக்கை அளவில் அதிகபட்சமாக 80 சதவீதம் என்ற அளவிலேயே விமானங்களை இருக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனை விரைவில் 100% ஆக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராளுமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: