UIDAI எனப்படும் ஆதார் அமைப்பின் பெங்களூரு அலுவலகம் கடந்த வாரம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. “யுஐடிஏஐ வழங்கிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும் என எச்சரித்தது.
மே 29ம் தேதி அன்று வெளியான அறிவிப்பில், ஆதார் நகல்களை எங்கு வேண்டுமானாலும் கண்மூடித்தனமாக பயன்படுத்தாதீர்கள், பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தால் உடனே அதனை டெலிட் செய்து விடுங்கள் என ஆதார் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. மேலும் வங்கிக்கணக்கு தொடங்குவது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு ஆதார் கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் கார்டைப் பயன்படுத்தும்படி ஆதார் அமைப்பு வலியுறுத்தியது.
ஆதார் நிறுவனம் மக்களை அறிவுறுத்தினாலும், அதனை கட்டாயம் அடையாளச் சான்றாக சமர்ப்பிக்க கோரும் நிறுவனங்களை எப்படி கையாளவது? என்ற கேள்வி எழலாம். அத்தகைய நிறுவனங்கள் தங்கள் பதிவுகளில் உங்கள் அடையாள விவரங்களைப் பராமரிக்க வேண்டியிருக்கலாம், ஆனால் நீங்கள் வழங்கக்கூடிய அடையாளச் சான்றிதழை அவர்களால் தீர்மானிக்க முடியாது. எனவே ஒரு தனியார் நிறுவனம் உங்கள் ஆதாரை சமர்ப்பிக்க வலியுறுத்தும் போதெல்லாம், வேறு ஏதேனும் அடையாள ஆவணத்தைக் கொடுக்க முடியுமா என்று எப்போதும் கேளுங்கள். உங்கள் ஆதாரைப் பகிர வேண்டும் என்றால் டிஜிட்டல் மாஸ்க் நகலைப் பகிருமாறு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆதார் அவசியமில்லை:
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய, உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் எனும் (KYC) செயல்முறையை நீங்கள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்யலாம். ஒருவேளை நீங்கள் நேரில் சென்று வெரிபிகேஷன் செய்கிறீர்கள் என்றால், உங்கள் பான் நெம்பர், மத்திய அரசு அல்லது சட்டப்பூர்வ அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பில்கள், அடையாள அட்டைகள், முகவரி சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தாலே போதுமானது. ஆதாரை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நீங்கள் ஆன்லைன் மூலம் KYC வெரிபிகேஷன் செய்தால், ஆதார் அவசியம், ஆனால் நீங்கள் ஆதார் நகலை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்களுக்கு அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு UIDAI ஆல் அனுப்பப்படும் OTP மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்யலாம். இதன் மூலம் ஈசியாக நீங்கள் eKYC ஐ முடிக்க முடியும்.
Also Read : சிலிண்டர் மானியத்தில் புதிய விதிமுறை... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
மானியத்திற்காக இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு ஆதார் கட்டாயம்:
அரசு மானியங்களைப் பெறுகிறீர்கள் என்றால், சட்டப்படி வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு ஆதாரை வழங்க வேண்டும். பிற காரணங்களுக்காக வங்கி கணக்கை ஆரம்பிக்கிறீர்கள் என்றால், அதாவது சேமிப்பு அல்லது கடன் பெறுவதற்காக வங்கி கணக்கை தொடங்கும் போது ஆதார் கட்டாயம் கிடையாது.
இதுபோன்ற சமயங்களில், அவர்கள் UIDAI-லிருந்து ஒரு மெய்நிகர் ஐடியை உருவாக்கலாம். இது உங்கள் ஆதாரின் முழு எண்களையும் வங்கியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நீங்கள் நினைக்கும் தருணத்தில் பயன்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதாரை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மறைக்கவோ அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் இல்லாமலும் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கலாம்:
ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் சேவைகளை பெற அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளில் ஒன்றாக மட்டுமே ஆதார் உள்ளது. இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயம் ஆதார் உடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் ஆதார் விவரங்களை பகிர மறுத்தால், பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் e-KYC மூலமாக வெரிபிகேஷன் செய்ய அனுமதிக்கின்றன. இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர் முகவரி சான்றாக மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் நகலை சமர்ப்பிக்கலாம். அங்கீகரிப்புக்காக OTP அனுப்பப்படும் விர்ச்சுவல் ஐடியை அனுப்பினால் போதும்.
Also Read : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!
ஆதார் தகவல்களை பகிர்வதால் வரும் ஆபத்துக்கள்:
ஆதார் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு வழிவகுப்பதோடு, உங்கள் ஆதார் எண்ணை அடையாள திருட்டுக்கும் பயன்படுத்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.