உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் எதிரொலியாக
திண்டுக்கல்லில் சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் உணவு பதார்த்தங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் ( ரீஃபைண்ட் ஆயில் ) 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது அங்கு போர் நீடித்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக சமையலுக்கு பயன்படுத்த கூடிய ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் டின் உக்ரைன் போருக்கு முன்பு 2,150 க்கு விற்பனையானது. ஆனால் தற்பொழுது உக்ரைனில் இருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் 15 கிலோ எடை கொண்ட டின் ரூ 2,525 க்கு விற்பனையாகிறது.
சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130 க்கு விற்பனை ஆனது ஆனால் தற்பொழுது ரூ.160 க்கு விற்பனையாகிறது, லிட்டருக்கு 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட பாமாயில் டின் ரூ 1,900க்கு விற்பனையானது ஆனால் தற்பொழுது ரூ.2,350 க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் விவரங்களைத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சில்லரையில் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.115 க்கு விற்பனையானது ஆனால் தற்பொழுது ரூ.145 க்கு விற்பனையாகிறது. லிட்டருக்கு ரூ 30 உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கடலை எண்ணையும் முன்பு ரூ 2,400 விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,600 க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ரூ.160 க்கு விற்பனை செய்யப்பட்ட கடலெண்ணெய் தற்பொழுது ரூ. 175 க்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்க: பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக முதல்வர் தொகுதியில் அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு
போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே சமையல் எண்ணெய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் இல்லையென்றால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு விடுதி நடத்தி வரும் அருண் கூறுகையில் தற்பொழுது போரின் எதிரொலியாக சமையல் எண்ணெய் லிட்டருக்கு 30 ரூபாய் கூடியுள்ளது. போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் மேலும் விலை கூட வாய்ப்புள்ளது. ஆகையால் வேறு வழியின்றி தோசை, பூரி, சப்பாத்தி, புரோட்டா போன்ற பதார்த்தங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர்: சங்கர் - திண்டுக்கல்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.