ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன் சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கரன்சி அமையவுள்ளது. டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக சென்றது.கிரிப்டோகரன்சியை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும், இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் (Dark web) போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் கிரிப்டோகரன்சி உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
எனவே, கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக வரன்முறையை ஏற்படுத்த கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The
Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கி மூலம் 2022-2023 நிதியாண்டில் வெளியிடப்படும்.
இதையும் படிங்க: Union Budget 2022 Highlights: மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்
இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மெய்நிகர் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக இந்திய அரசே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளது உறுதியாகியுள்ளது. அதேவேளையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களின் நிலை குறித்த எவ்வித தகவலும் இல்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.