2022 - 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். 2023ம் ஆண்டுக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் டிஜிட்டல் கரன்சியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் முதற்கட்டமாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?
டிஜிட்டல் கரன்சி அல்லது இ-ரூபாய் என்பது தற்போதுள்ள பேப்பர் வடிவத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக டிஜிட்டல் கோட்களை கொண்ட டிஜிட்டல் கரன்சி அல்லது இ-ரூபாயாகும். இதனை அனைத்து விதமான டிஜிட்டல் கரன்சிக்கும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இது டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த மட்டுமே தவிர, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக அல்ல என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாயின் முக்கிய அம்சங்கள்:
1. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது மத்திய வங்கிகளால் அவர்களின் பணவியல் கொள்கைக்கு ஏற்ப வெளியிடப்பட்ட ஒரு இறையாண்மை நாணயமாகும்.
2. டிஜிட்டல் கரன்சி என்பது ரிசர்வ் வங்கியின் இருப்புநிலையை பொறுத்து அமையும்.
3. டிஜிட்டல் கரன்சியை குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சேமிப்பு, பணம் செலுத்துதல், சட்டப்பூர்வ பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு ஏற்றது.
4. வங்கி பணத்தைப் போலவே டிஜிட்டல் கரன்சியையும் எளிதாக மாற்றவும், வங்கிகளில் சேமிக்கவும் முடியும்.
5.ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் டிஜிட்டல் கரன்சியை சேமிக்க தனியாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
6. கரன்சி நோட்டுகளுக்கு இணையான மதிப்புதான் டிஜிட்டல் கரன்சிக்கும் வழங்கப்படும் என்றாலும், இதை எளிதாகப் பயன்படுத்தலாம், விரைவாக பரிவர்த்தனைகளை முடிக்கலாம்.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் வகைகள்:
பொது நோக்கம் அல்லது சில்லறை விற்பனை (CBDC-R), மொத்த விற்பனை (CBDC-W) என மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சில்லறை CBDC என்பது சில்லறை பரிவர்த்தனைகளுக்கான பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். சில்லறை விற்பனைக்கான டிஜிட்டல் நாணயங்களை தனியார் நிறுவனங்கள், நிதி சாராத நிறுவனங்கள் மற்றும் வணிகத்திற்கு பயன்படுத்தலாம். மொத்த CBDC ஆனது வங்கிகளுக்கிடையேயான பரிமாற்றங்கள் மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ CBDC-யை அறிமுகப்படுத்த காரணம் என்ன?
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமானது (CBDC) டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணயம் ஆகும். இதனை பரிவர்த்தனைக்காகவும், சேமிப்பிற்காகவும் பணத்தைப் போலவே பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவது "இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும், பணவியல் மற்றும் கட்டண முறைகளை திறமையானதாக மாற்றவும் உதவும்” என ரிசர்வ் வங்கி கருதுகிறது.
- ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது, பராமரிப்பது போன்ற செலவுகளை குறைக்க டிஜிட்டல் கரன்சி பயன்படும்.
- பொருளாதாரத்தை அதிகரிக்க டிஜிட்டல் கரன்சி உதவக்கூடும்.
- எல்லை கடந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் உதவும்.
- நிதி ஆதாரங்களை அதிகரிக்க பயன்படும்.
டிஜிட்டல் Vs கிரிப்டோகரன்சிக்கான வேறுபாடு:
கடந்த ஆண்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் புழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்திருந்தது. கிரிப்டோ கரன்சியில் பெருவாரியான முதலீடுகளைச் செய்வது பண மோசடி, பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்வது போன்றவற்றிற்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு பணவியல் கொள்கை பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு வழிவகுக்கக்கூடும். ஆனால் டிஜிட்டல் கரன்சியானது ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தக்கூடிய என்பதால் சட்டப்பூர்வமான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital Currency, Investment, Money, Savings