சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ. 100 கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து, நூறு ரூபாயைக் கடந்து, 100.18 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 நாட்களில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை 8.69 ரூபாயும், டீசல் விலை 8.75 ரூபாயும் உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, தமிழகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து, பெண்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில், சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட இருப்பதாக, சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் சுந்தரம் கூறியிருக்கிறார்.
Must Read : தூத்துக்குடியில் 19 ஆண்டுகளாக பதநீர் விற்கும் பணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கும் கிராம மக்கள்- அரசு உதவ கோரிக்கை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.