சர்வதேச சந்தையில் கடந்த வாரம் 96 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்து, 111 டாலரை எட்டியுள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயரும் ஆபத்து உருவாகியுள்ளது.
இதனிடையே, தங்கம் விலையும் போட்டி போட்டு அதிகரித்து வருவதால், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.
கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 4,878 ரூபாய்க்கும், ஒரு சவரன் 39,024 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2.10 ரூபாய் அதிகரித்து 72.10 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2,100 ரூபாய் உயர்ந்து, 72,100 ரூபாய்க்கும் விற்பனையானது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடனே தொடங்கின. ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டாலும், பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்ததால் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 778 புள்ளிகள் குறைந்து 55,469 புள்ளிகளில் நிலை கொண்டது.
உ.பி தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை ரூ.125-வரை அதிகரிக்கலாம் - பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 188 புள்ளிகள் சரிவடைந்து, 16,606 புள்ளிகளில் முடிவடைந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.