முகப்பு /செய்தி /வணிகம் / சமையல் எண்ணெய்யின் விலை ரூ.10 வரை குறையுமா? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!

சமையல் எண்ணெய்யின் விலை ரூ.10 வரை குறையுமா? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!

சமையல் எண்ணெய் விலை

சமையல் எண்ணெய் விலை

பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் விலை ரூ.10 வரையிலும் குறைப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்

சமையல் எண்ணெய்களின் விலை சர்வதேச அளவில் குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையை ரூ.10 வரை குறைக்க வேண்டும் என்றும், இதை வாரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒரே பிராண்டின் எண்ணெய்-க்கு நாடெங்கிலும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களுக்கான தேவைகளில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலமாக இந்தியா நிவர்த்தி செய்து வருகிறது.கடந்த சில மாதங்களில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சில்லறை விற்பனையில் எண்ணெய் விலை அதிகரித்தது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது..!

தற்போதைய சூழலில், சமையல் எண்ணெய்களின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் எண்ணெய்களின் விலையை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் குறைத்தனர்.

உற்பத்தியாளர்களுடன் அரசு ஆலோசனை

சர்வதேச சந்தையில் தற்போது மேலும் விலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விற்பனை கூட்டமைப்புகள் மற்றும் பிரதான உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் மத்திய உணவு துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே ஆலோசனை நடத்தினார். தற்போதைய சூழலுக்கு ஏற்ப எண்ணெய்களின் எம்ஆர்பி விலையை குறைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து சுதான்ஷு பாண்டே கூறுகையில், “கடந்த வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் உற்பத்தியாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், விலை குறைவின் பலன்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதனால், எம்ஆர்பி விலையை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை அதிகரிப்பு - கலங்கும் இல்லத்தரசிகள்..

இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் விலை ரூ.10 வரையிலும் குறைப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வெவ்வேறு மண்டலங்களில் விற்பனையாகும் ஒரே பிராண்டின் எண்ணெய் விலையில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடு காணப்படுகிறது. இத்தகைய சூழலில் ஒரே எம்ஆர்பி முறையை கையாள வேண்டும் என்று நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cooking Oil, Olive oil