மே மாதம் இன்று தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன. அதேவேளை, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதையடுத்து 19 கிலோ கமர்சியல் சிலின்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.102.50 உயர்ந்து ரூ.2,355க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை ஆகிறது. மும்பையிலும் விலை ரூ.102 உயர்த்தப்பட்டு, ரூ.2,307க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக கொல்கத்தாவில் விலை ரூ.104 உயர்த்தப்பட்டு, ஒரு சிலின்டர் ரூ.2,455க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி கமர்சியல் சிலின்டரின் விலை ரூ.268.50 வரை உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ஒரே மாதத்தில் ரூ.100க்கும் மேல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலின்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லியில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலின்டர் ரூ.949.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.965.50க்கும், மும்பையில் ரூ.949.50க்கும் கொல்கத்தாவில் ரூ.976க்கும் 14.2 கிலோ சிலின்டர் விற்பனை செய்யப்படுகிறது. கமர்சியல் சிலின்டர் விலை உயர்வு போலவே ஜெட் விமான எரிபொருளின் விலையும் நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான போக்குவரத்து சேவை கட்டணம் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:
வெப்பமான ஏப்ரல்...122 ஆண்டுகளில் இல்லாத வெயில்: 9 மாநிலங்களில் பதிவாகியது
ஏற்கனவே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதன் தாக்கமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மக்களை கவலை அடைய செய்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாமாயில் தட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.