Home /News /business /

ஊழியர்களுக்கு BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம்

ஊழியர்களுக்கு BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம்

பிஎம்டபியூ கார் பரிசு

பிஎம்டபியூ கார் பரிசு

குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரிவித்தார் Kissflow நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் சம்பந்தம்.

    தன்னுடன் 10வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார்களை சென்னையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் பரிசாக வழங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

    சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

    நிறுவனம் துவங்கி இன்று 10வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் அனைத்து ஏற்ற இறக்கத்திலும் தன்னோடு பயணித்து கம்பெனியின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை சுரேஷ் சம்பந்தம் பரிசாக வழங்கினார். குடும்பத்தோடு வந்து காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.

    இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுரேஷ் சம்பந்தமிடம் கேட்ட போது, ‘ கம்பெனி துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும், அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரிவித்தார்.



    பின்னர் காரை பரிசாக பெற்ற விவேக் கூறுகையில் எதிர்பார்க்கமுடியாத இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். குடும்பமே மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்,  கல்லூரி படிப்பை முடித்து விட்டு அனுபவம் இல்லாமல் சேர்ந்தோம். தற்போது 10 ஆண்டுகளில் ஒன்றினைந்து உழைத்தோம் அதற்காக கார் பரிசாக அளித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர்.



    எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த கனவு காரை நனவாக்கி தனது சிஇஓ வாங்கிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய ஆதி, ‘ என்னிடம் ஒரு முறை விளையாட்டாக கேட்டார் என்ன கார் பிடிக்கும் என்று, நானும் கூறினேன் ஆனால் அந்த காரையே பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்றார் ஆச்சரியம் விலகாமல்.

    செய்தியாளர்: வினோத் கண்ணன் - ஈசிஆர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: BMW car, IT JOBS

    அடுத்த செய்தி