2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. நிர்மலா சீதாரமன் வெளியிட்ட அறிவிப்புகளில் 10 முக்கிய அறிவிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. டிஜிட்டல் கரன்சி
பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பின் எதிரொலியாக பங்குச்சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளன.
2. 5ஜி ஏலம்
5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை (Spectrum) ஏலம் 2022-23ல் நடத்தப்படும். 2022-23ம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை தொடங்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 5ஜி உபகரணங்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும்.
3. நதிகள் இணைப்பு திட்டம்:
ரூ.44,605 கோடியில் நீர்ப்பாசன இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கங்கை - கோதாவரி, கிருஷ்ணா - காவிரி, காவிரி - பெண்ணாறு உட்பட 5 நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தென்னக மாநிலங்கள் பலனடையும்.
4. ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டம்
பள்ளிக்கல்வியை மேம்படுத்த ‘ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி’ திட்டத்தின் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மாநில மொழிகளில் கல்வி பயில்வதற்கான தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 200 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. 60 லட்சம் பேருக்கு வேலை
மேக் இன் இந்தியா திட்டம் மூலம், 14 துறைகளில், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம்
6. 400 வந்தே பாரத் ரயில்கள்
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும், 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
7. அனைத்து கிராமங்களில் இணைய வசதி
பாரத் நெட் திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டுக்குள் Fiber Optic முறையில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தப்படும். பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கும் உதவும் வகையில் வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
9. வருமானவரி - 2 ஆண்டு அவகாசம்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் போது தவறு ஏற்பட்டால் அவற்றை திருத்திக் கொள்ளலாம். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.
10. கிரிப்டோ கரன்சி - 30% வரி
பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்
ஜி.எஸ்.டி வசூல் புதிய சாதனை:
இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.40,986 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதார மீட்சி நிலையை காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதே போல இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏற்படவில்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயாகவே தொடரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.