Budget 2021 | இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு!

Budget 2021 | இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு!

நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன்

எஸ்.பி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தனியார்மயமாக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம் எனவும் தெரிவித்தனர்.

  • Share this:
பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் 2021ஐ தாக்கல் செய்த நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் எனவும் பங்குச்சந்தையில் புதிய பங்கு விற்பனையின் மூலம்எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஒருங்கிணைப்பின் ஒரு அங்கமாக இந்த அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களின் ரூ .20,000 கோடி மறு மூலதனமாக்கல் குறித்த அறிவிப்பையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

இரண்டு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்த போதிலும் அவை எந்த வங்கிகள் என அவர் தெரிவிக்கவில்லை. வங்கி சார்ந்த நிபுணர்கள் கூறுகையில் பெரிய வங்கிகளான எஸ்.பி.ஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தனியார்மயமாக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் தனியார்மயமாக்கப்படலாம் எனவும் தெரிவித்தனர்.

 நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன்


வங்கிகளை பொருத்தவரையில் செயல்படாத சொத்துக்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவை சுமையை ஏற்படுத்தியிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவது என்பது அந்த வங்கிகளின் உள்ள பங்குகளை 51% கீழ் கொண்டு வருவது அல்லது மொத்தத்தையும் விற்றுவிடுவது என இரண்டு வடிவங்களில் ஏதேனும் ஒரு வழியில் நடைபெறலாம் என தெரிவிக்கின்றனர். இருப்பினும் வங்கி யூனியன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வாய்ப்பு உள்ளது. 2022 நிதியாண்டுக்குள் பொதுத்துறை நிறுவனங்களின் விற்று முதல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எது என்பதையும் நிதியமைச்சர் தெரிவிக்கவில்லை. நியூ இந்தியா அஸூரன்ஸ், யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களாகும். இவற்றில் ஒன்றை தனியார்மயமாக்க வரும் நாட்களின் நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது.

2020-21 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் விற்று முதல் மூலம் ரூ.2.1 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, கொரோனா பரவல் காரணமாக அரசின் இம்முயற்சி தடைபட்டது.
Published by:Arun
First published: