ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2021 : தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பிரேத்யகமாக அறிவிப்பு

பட்ஜெட் 2021 : தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பிரேத்யகமாக அறிவிப்பு

Budget 2021-22:

Budget 2021-22:

சென்னையில் 118 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப்பணிகளுக்காக 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என பிரத்யேகமாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரையில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கென பிரத்யேகமாக பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

  அதன்படி, தமிழகத்தில் 3,500 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க ஒரு லட்சத்து 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இதில் மும்பை - கன்னியாகுமரி புதிய வழித்தடம் அமைக்கவும், மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  சென்னையில் 118 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப்பணிகளுக்காக 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடிதுறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும் என்றும், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  அதேபோல், கேரள மாநிலத்தில் ஆயிரத்து 100 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும், மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்பாடு உள்ளிட்ட 6 ஆயிரத்து 700 கிலோமீட்டர் நெடுஞ்சாலை பணிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  அசாம் மாநிலத்தில் தற்போது 19 ஆயிரம் கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், புதிதாக ஆயிரத்து 300 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் உட்பட 34,000 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

  இந்த நான்கு மாநிலங்களில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஏற்கனவே தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கால்தடம் பதிக்க விரும்பும் பாஜக, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Budget 2021, Nirmala Sitharaman