பட்ஜெட் 2021 எதிர்பார்ப்புகள்: Direct tax உட்பட எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் தேவை...?

பட்ஜெட் 2021 எதிர்பார்ப்புகள்: Direct tax உட்பட எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் தேவை...?

Direct tax உட்பட எவைக்கெல்லாம் முக்கியத்துவம் தேவை?

பட்ஜெட் 2021க்கான முக்கிய எதிர்ப்பார்ப்புகளை பற்றி இங்கே காண்போம்.

  • Share this:
2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த ஓராண்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ப மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிதியமைச்சர் பூர்த்தி செய்வாரா? என்பன போன்ற பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளது. அந்த வகையில் பட்ஜெட் 2021க்கான முக்கிய எதிர்ப்பார்ப்புகளை பற்றி இங்கே காண்போம்.

வருமான வரி விலக்கு :

5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தாலும், வரி அல்லாத வருவாய்க்கான அடிப்படை விலக்கு 2.5 லட்சமாக தொடர்கிறது. இது நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்கு நெருக்கடியாக இருப்பதால், அடிப்படை விலக்கை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், மக்களின் வருமானம் பெருகுவதுடன், நாட்டில் செலவுத்திறனை ஊக்குவித்து பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும்.

வரி சேமிப்பு முதலீடு :

வருமான வரிச் சட்டம் பிரிவுகள் 80C, 80CCD (1B) கீழ் வரி சேமிப்பு முதலீடுகளுக்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசாங்கம் நீண்ட கால நிதியை ஒரு நிலையான விகிதத்தில் எளிதாகப் பெற முடியும். "மேலும் முதலீட்டு அடிப்படையிலான கழிவுகள் மற்றும் செலவு அடிப்படையிலான நிவாரணங்களை எதிர்பார்க்கலாம்" என்று நிபுணர்கள் கூறினார்.

குடியுரிமை பெறாத முதலீட்டாளர்களுக்கு வரி சலுகைகள்:

பல்வேறு துறைகளில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்க, அரசாங்கம் இணக்கத்தைக் குறைத்து, குடியுரிமை பெறாத முதலீட்டாளர்களுக்கு இலாபகரமான வரி சலுகைகளை இந்த நிதியாண்டில் வழங்கக்கூடும். இருப்பினும், நிதி அமைச்சர் வரிச்சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்ப்பதாக பூட்டா ஷா அண்ட் கோ நிறுவன பங்குதாரர் ஹர்ஷ் பூட்டா கூறியுள்ளார்.

கொரோனா செலவுகளுக்கு சலுகைகள்:

கொரோனா கொடிய நோயால் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதனால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடியாலும் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனாவால் ஏற்படக்கூடிய மருத்துவமனை செலவுகளுக்கு வரிச் சலுகை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டின் சொத்துவரி இழப்பு:

கடந்த பட்ஜெட்டில் வருமானவரி குறைப்பு மற்றும் விலக்கு கிடைக்காத தனிநபர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சூப்பரான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. வீட்டு வாடகையினால் ஏற்படும் இழப்பை மற்ற வருமானத்தை கொண்டு ஈடுசெய்ய அனுமதியளித்தது. இது வரி செலுத்தாத தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும், கொரோனா காலத்தில் வீட்டு வாடகை மூலம் வருவாய் ஈட்டுவது மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில், வீட்டு வாடகை மூலம் வருவாய் ஈட்டுவதில் ஏற்பட்டு உள்ள இழப்பை சரிசெய்யும் விதமாக, அதற்கான வரிச்சலுகையை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் துறை:

இந்திய ஆட்டோமொபைல் துறை பல மாதங்களுக்குப் பின் 2020 பண்டிகை காலத்தில் வர்த்தக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவோருக்கும் வருமான வரியில் சலுகை கொடுத்தால் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகம் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் இத்துறையில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும்.

சுகாதார காப்பீடு :

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான மக்களின் சேமிப்பு, மருத்துவச் செலவுகளில் முடங்கியது. இதனால், காப்பீடு திட்டங்களில் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கான செலவுத்தொகையின் அடிப்படை வரம்பு ரூ.25,000 இருந்து ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் சலுகைகளையும் அளிக்க வேண்டும் என விரும்புகின்றனர். குடும்ப காப்பீடு, தனிநபர் காப்பீட்டில் சலுக்கை அளிக்கும்பட்சத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும்.

வீட்டுச் செலவுகளிலிருந்து பணிக்கு வரி சலுகைகள்:

கொரோனா காலத்தில் ஏராளமானோர் வீட்டில் இருந்தே வேலைசெய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஊழியர்கள் பெற்றுக்கொண்ட படித் தொகைக்கு வரி விலக்கு அளிக்கலாம்.

HRA பிரச்சனை - வீட்டு வாடகை:

பெரும்பாலான ஊழியர்கள் தங்களது HRA-ஐ முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், இதை முழுமையாக க்ளைம் செய்யும் படி புதிய சட்ட விதிகளைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக டிஜிட்டல் அல்லது காசோலை முறையிலான பேமெண்ட்களைக் கணக்கில் கொண்டு கணக்கிடும் வகையில் புதிய வரைமுறையைக் கொண்டு வரவேண்டும் என விரும்புகின்றனர்.

மேற்சொன்னது மட்டுமில்லாமல் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுமா என்பது சம்பளதாரர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா காலகட்டத்தால், பல நிறுவனங்களும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்தன. மக்கள் வழக்கமான செலவீனங்களை மேற்கொள்ள அதிக சிரமப்பட்டனர். தற்போதுதான் நிலைமை ஓரளவு மேம்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாத ஊதியதாரர்களுக்கு பலன் தரும் வகையில், 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. இதற்கெல்லாம் நாம் பிப்ரவரி 1 ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: