நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்! ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை

அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது. 

News18 Tamil
Updated: June 24, 2019, 8:28 PM IST
நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்! ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை
பி.எஸ்.என்.எல்
News18 Tamil
Updated: June 24, 2019, 8:28 PM IST
பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் கோரிக்கை வைத்துள்ளது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியால் லாபமீட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் 2 ஆண்டுக்கு முன்பே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது 5ஜி சேவையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜி சேவையைத்தான் கொடுத்து வருகிறது. 2004-05க்குப் பிறகு இதுவரையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2018-19 நிதியாண்டு கணக்கின்படி 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடனிலிருந்தும், வருவாய் இழப்பிலிருந்தும் பிஎஸ்என்எல்-ஐ மீட்க மத்திய அரசு இதுவரையில் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது.

பிஎஸ்என்எல் தனது இயக்கு செலவில் 66 விழுக்காட்டை ஊதியம், ஓய்வூதியம் கொடுக்க செலவிடுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனிப்பட்ட செலவுகளுக்காக 3 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது. 2008-09ஆம் ஆண்டுக்குப் பிறகு பிஎஸ்என்எல் நிறுவனம் லாபம் ஈட்டவே இல்லை. 2017-18ல் ரூ.7 ஆயிரத்து 993 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளது. இந்த நெருக்கடிகளால் பிஎஸ்என்எல் ஜூன் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை ஊதியத்தை வழங்கவும், தொடர்ந்து இயங்கவும் இந்நிறுவனத்துக்கு உடனடியாக 850 கோடி ரூபாய தேவைப்படுவதாகவும், தொடர்ந்து நிலையாக இயங்க 13,ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. பிஎஸ்என்எல்-ஐ தொடர்ந்து இயக்குவது கவலைக்குரியதாக உள்ளதாக அதன் மூத்த மேலாளர்களில் ஒருவரான புரன் சந்த்ரா தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...