ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணம் செலுத்தாமல் ஷாப்பிங் செய்யலாம்... சக்கை போடு போடும் BNPL திட்டம்..!

பணம் செலுத்தாமல் ஷாப்பிங் செய்யலாம்... சக்கை போடு போடும் BNPL திட்டம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் அமேசான் பேலேட்டர், பிளிப்கார்ட் பேலேட்டர், செஸ்ட் மணி, லேசிபே போன்ற நிறுவனங்கள் மக்களிடையே BNPL திட்டத்தை பெருமளவில் கொண்டு சேர்த்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அனைத்தும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப தங்களது தொழில்முறையிலும், கட்டணங்கள் செலுத்தும் முறைகளும் மாற்றங்களை செய்து வருகின்றன. முடிந்த அளவு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அனைவரும் புதிய புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டமாக அறியப்பட்டது தான் BNPL எனப்படும் பை நவ் பே லேட்டர் (Buy now pay later).

அதாவது உங்களுக்கு பிடித்த பொருளை நீங்கள் பணம் ஏதும் செலுத்தாமல் வாங்கிக் கொண்டு, பிறகு குறிப்பிட்ட காலங்கள் கழித்து அதற்கான பணத்தை செலுத்தினால் போதும். மேலும் குறிப்பிட்ட காலம் வரை அதற்கு எந்த வட்டியும் போடப்படுவதில்லை. இதனால் ஷாப்பிங் செய்வதில் விருப்பமுடைய அனைவருக்கும் ஏற்ற திட்டமாக இது உள்ளது. இந்த பிஎன்பிஎல் திட்டத்தை அளிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மாத தவணையிலும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலும் நீங்கள் பணத்தை செலுத்த வேண்டி இருக்கும். மேலும் நீங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பிஎன்பிஎல் திட்டத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது அதிக வட்டி போடப்படுவதில்லை என்பதும் இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் அமேசான் பேலேட்டர், பிளிப்கார்ட் பேலேட்டர், செஸ்ட் மணி, லேசிபே போன்ற நிறுவனங்கள் மக்களிடையே இத்திட்டத்தை பெருமளவில் கொண்டு சேர்த்துள்ளன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே விதமான முறையில் தான் தனது சேவைகளை வழங்குகின்றன. அதாவது நீங்கள் பொருட்களை வாங்கும் போது அதில் கட்டணம் செலுத்தும் இடத்தில் பை நவ் பே லேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உங்கள் முழு விவரங்களையும் அளித்த பிறகு நீங்க வாங்கிய பொருளின் மொத்த விலையில் மிகச் சிறிய அளவு கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டியது இருக்கும்.

மீதமுள்ள கட்டணம் அனைத்தும் மாத தவணையில் வட்டியிடனோ அல்லது வட்டி இல்லாமலும் செலுத்தி கொள்ளலாம். இந்தியாவில் இந்தத் திட்டத்தை பெறுவதற்கு இந்திய குடிமகனாகவும், முதல் அல்லது இரண்டடுக்கு நகரங்களில் வாழும் நபராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், சம்பளம் பெறும் நபராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கென தனியான வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிஎன்பிஎல் ஆப்ஷனை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது மறைமுகமாக உங்களிடமிருந்து எந்த கட்டணமும் பெறப்படுவதில்லை. அனைத்தும் வெளிப்படையாக மிக நேர்மையாக நடப்பதாகவே நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவெனில் ஒரு மாதம் நீங்கள் தவணையை சரியாக கட்ட தவறினாலும் உங்களுக்கு வட்டி விதிக்கப்படலாம். இதன் மூலம் பொருளின் உண்மையான விலையை விட அதிக விலையை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டி வரலாம். எனவே இங்கு கவனமாக செயல்படவில்லை எனில் கடனாளியாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் எந்தவித தவறுதலும் இன்றி சரியாக உங்களது மாத தவணைகளை செலுத்தி வந்தால், உங்களது கிரெடிட்ஸ் ஸ்கோர் கனிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Amazon, Business, Flipkart