வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம் - வங்கி சேவைகள் முடங்கியது

கோப்புப்படம்.

  • Last Updated :
  • Share this:
வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், வங்கி சேவை முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இரண்டு சங்கங்களுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் மூன்றரை லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் வங்கி பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் உள்ளது.

வேலைநிறுத்தத்தால் தங்களது வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவை தெரிவித்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த 2 ஊழியர்கள் சங்கங்களிலும் தங்களது ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றும், ஆதலால் பாரத ஸ்டேட் வங்கி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

 
Published by:Yuvaraj V
First published: