நாட்டில் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி விளம்பரங்களை முறைப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) விதித்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 1980களின் தொடக்கத்தில் கிரிப்டோகரன்சி என்னும் மெய்நிகர் நாணயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக சென்றது.
இந்தியாவிலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 10.07 கோடி முதலீட்டாளர்களுடன் கிரிப்டோ வர்த்தகத்தில் இந்திய சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. எனினும் கிரிப்டோகரன்சியை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் கூட கிரிப்டோகரன்சிக்கு மாற்றாக ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கிரிப்டோ மோகம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளது. பிரபலமான நடிகர்கள் எல்லாம் கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தின் விளம்பரங்களில் தோன்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கிரிப்டோ கரன்சி விளம்பரங்களை வரைமுறைப்படுத்தும் விதமாக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) புதிய விதிகளை வகுத்துள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டால் இந்தியாவில் எவையெல்லாம் விலை உயரும்?
மெய்நிகர் டிஜிட்டல் சொத்து VDA பொருட்கள் மற்றும் பெய்நிகர் டிஜிட்டல் சொத்து வர்த்தக தளங்கள் தொடர்பான விளம்பரங்களில் “கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது’ என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளிதழ் விளம்பரங்களில் 5ல் ஒரு பகுதியை இந்த வாசகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வீடியோ விளம்பரத்தில் இந்த வாசகம் இறுதியில் பின்னணி குரலுடன் இடம்பெற வேண்டும், ஆடியோ விளம்பரத்தில் எச்சரிக்கை வாசகம் தொடர்பான பின்னணி குரல் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பமா? நீங்கள் இந்த வங்கிகளுக்கு செல்வது பெஸ்ட் சாய்ஸ்!
குறிப்பாக எச்சரிக்கை வாசகம் தொடர்பான பின்னணி குரல் இயல்பாக இருக்க வேண்டும் என்றும் வேகமாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாணயம், பத்திரங்கள், பாதுகாப்பு, மற்றும் முதலீடு ஆகிய சொற்களை விளம்பரங்களில் பயன்படுத்தப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.