ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாகிறார் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா..!

 2 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரெட் ஹட் மென்பொருள் நிறுவனத்தை ஐபிஎம் கையகப்படுத்தியதில், கிருஷ்ணா பெரும் பங்கு வகித்தார்

ஐ.பி.எம் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாகிறார் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா..!
அரவிந்த் கிருஷ்ணா
  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, அமெரிக்க வாழ் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது ஐ.பி.எம். நிறுவனம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான மென்பொருட்களை தயாரித்தல், நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், அவரது இடத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியரான 57 வயதான அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டியில் மின் பொறியியலில் பட்டம்பெற்ற அவர், அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1990-ஆம் ஆண்டே ஐபிஎம் நிறுவனத்தில் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா, சுமார் 30 ஆண்டுகளாக, அந்நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்.


2,44,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெட் ஹட் மென்பொருள் நிறுவனத்தை ஐபிஎம் கையகப்படுத்தியதில், கிருஷ்ணா பெரும் பங்கு வகித்தார், ஐபிஎம் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய நடவடிக்கையாகும். கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்ற அரவிந்த் கிருஷ்ணா, வரும் ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தற்போதைய சிஇஓ கின்னி ரோமேட்டி, ஐபிஎம் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு வழிநடத்த தகுதியான நபர் அரவிந்த் கிருஷ்ணா என புகழாரம் சூட்டியுள்ளார். மைக்ரோ சாஃப்ட், கூகுள் மற்றும் அல்ஃபாபெட், மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கும் நிலையில், மற்றொரு இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா, ஐ.பி.எம். நிறுவன சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

 
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்