ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் அங்கு பயன்படுத்தப்பட்ட பண்டைய நாணயங்களுக்கு முக்கிய பங்குண்டு. இன்றளவும் நாணயங்களை வைத்தே ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த நாணயங்களுக்கே வரலாற்றை உருவாக்கி கொடுத்ததில், இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. ஆரம்ப காலங்களில் பண்டமாற்று முறையில் மட்டுமே வாணிபம் செய்யப்பட்ட நிலையில், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மௌரிய பேரரசு காலத்தில் இந்தியாவில் வெள்ளியால் ஆன நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு உருவங்கள் பொறிக்கப்பட்ட செம்பு, தங்கம் போன்றவற்றால் ஆன, நாணயங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
மொகாலய மன்னர் ஹுமாயூனை வீழ்த்தி டெல்லியை 7 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஷெர்ஷா சுரி, கி.பி. ஆயிரத்து 540ம் ஆண்டு கால கட்டத்தில் ருபியா எனும் 11.5 கிராம் எடையிலான, வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். வார்க்கப்பட்ட வெள்ளி என்பதே ருபியாவின் பொருள், அதுவே காலப்போக்கில் மருவி தற்போது ருபி என்ற பெயர்ச்சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளி நாணயங்களின் பயன்பாடு ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்து. சிப்பாய் கலகத்திற்கு பின் ரூபாய் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணமாக ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டது.
1882ம் ஆண்டு முதல் முறையாக காகிதப்பணம் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. 19ம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் இந்தியாவில் வெள்ளி நாணயங்களின் பயன்பாடு இருந்தது. அம்பேதகர் உள்ளிட்ட பலரின் கடுமையான முயற்சியால் இந்தியாவில், 1935ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமைக்கப்ப்பட்டது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறித்த 5 ரூபாய் நோட்டு முதல் முறையாக ஆர்பிஐ வங்கியால் அச்சிடப்பட்டு வெளியானது. பின்பு இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் நல்ல வளர்ச்சியை கண்டது.
Also Read : பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1 முதல் தடை..! இந்த பொருளையெல்லாம் பயன்படுத்தினால் அபராதம்
1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற போது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என இருந்தது. விடுதலைக்கு பிறகான முதல் 10 ஆண்டுகளுக்கு, இந்திய ரூபாய் 16 அணாக்களாக பிரிக்கப்பட்டன, ஒரு அணாவின் மதிப்பு 4 பைசாக்கள் ஆகும். பின்பு, 1957ம் ஆண்டு 100 பைசாக்கள் ஒரு ரூபாய் என, பண மதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்ற பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வசதிகளைப் பெறும் வரை, பாகிஸ்தானும் இந்திய பணத்தையே பயன்படுத்தியது.
1960களில் ஏற்பட்ட பணவீக்கத்தால் இந்தியாவில் நாணயங்கள் அலுமினியத்தில் அச்சடிக்கப்பட்டன. 1970 களில் எஃகால் ஆன 10 முதல் 50 பைசா வரையிலான நாணயங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. 1954 முதல் 1978 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டன.
இந்திய காகித பணத்தில் நான்கு தலை கொண்ட சிங்க முகம் பொறிக்கப்பட்டு வந்த நிலையில், 1996ம் ஆண்டு முதல் காந்தியின் முகம் பொறிக்கப்பட்டு வருகிறது. அதில் வாட்டர் மார்க் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 25 பைசா மற்றும் அதற்கும் குறைவான நாணயங்களை 2011 ஜூன் 30 அன்று ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.
1971ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒரு ரூபாய்க்கு 13 அமெரிக்க டாலர் சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பொருளாதார சரிவு மற்றும் பண வீக்கத்தால் டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பு!
செய்தியாளர் : குலசேகரன் முனிரத்தினம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Indian Rupee