பண்டிகை காலம் வந்துவிட்டாலே, இணையதளத்தில் தள்ளுபடி விற்பனை களைகட்டும். அதில், பொருட்களை வாங்க, வங்கிகள் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கின்றன.
கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு தீபாவளியைக் காட்டிலும், இந்த ஆண்டு குறைந்து இருந்தாலும் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இனி வரும் காலங்களில் ”பிக் பில்லியன் டே சேல்” போன்ற மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையையும் கொண்டு வர இணையதள நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போது, எப்படி இந்த விலைக்கு ஒரு பொருளை கொடுக்க முடிகிறது என்ற சந்தேகத்துடன் தான் பலரும் தள்ளுபடி விற்பனையை அணுகுகிறோம். அதாவது, ஒரு பொருளின் விலை 1,000 ரூபாய் என்றாலும், அதை தள்ளுபடி என்ற பெயரில் 600 ரூபாய்க்கு கொடுப்பார்கள். ஆனால் இது ஒரு மைண்ட் கேம் என்கின்றனர் நிபுணர்கள். அதாவது வாடிக்கையாளர்களை ஆன்லைனில் வாங்கவைக்க பழக்கப்படுத்த இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது. தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்பதால், ஒரு பொருள் தேவைப்படும் இடத்தில், ஒருவர் இரண்டு பொருட்களை வாங்குவார். அதன் பின்னர், அதே பொருளை கடையில் வாங்க செல்லும் முன்னர் முதலில் இணையதளத்தில் விலையை பார்த்துவிட்டு தான் அந்தப் பொருளை வாங்குவார்.
ஒரு நிறுவனத்தை விளம்பரம் செய்ய எப்படி ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறதோ, அதேபோல், தன்னுடைய வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரிக்க, தன்னுடைய செலவுகளில் ஒரு தொகையை ஒதுக்கும். அந்த முறையின் பெயர் CASH BURN. இந்த தொகை என்பது ஒரு நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்காக செய்யும் செலவு. இந்த பணத்தில் இருந்து தான், தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வங்கியின் முக்கிய வருமானமே, வட்டி வசூல் செய்வது தான், அப்படி இருக்க, NO COST EMI போன்ற சலுகைகளை ஏன் வங்கிகள் வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும். NO COST EMI என்பது பெரும்பாலும், கிரெடிட் கார்ட்களில் தான் வழங்கப்படுகிறது. காரணம், கிரெடிட் கார்ட் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது வங்கிகள் கையாளும் யுக்தி. சரியான கால கட்டத்தில், பில் தொகையையோ, தவணையையோ செலுத்த தவறுபவர்கள் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை, வங்கிகளின் வருமானத்திற்கு ஒரு முக்கிய ஆதாரம்.
ஒரு இணையதள நிறுவனம் மூலம் பொருட்களை வாங்கும் போது, அதற்கு தொடர்பே இல்லாத வங்கிகள், ஏன் வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முன் வர வேண்டும் என்ற கேள்வியும் எழலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய விற்பனை நிறுவனங்களுடன் வங்கிகள் ஒப்பந்தம் மேற்கொண்டு, இது போன்ற வட்டியில்லாத கடனை வழங்குகின்றன. அதற்கான கமிஷன் தொகை வங்கிகளுக்கு வழங்கப்படும். எனவே, NO COST EMI மூலம் கடனாக வாங்கினாலும், முழு தொகையை கொடுத்து வாங்கினாலும், ஒரே விலை தான். அதே சமயம், கடைகளில் முழு தொகையும் கொடுத்து வாங்கும் போது, அந்த பொருளின் விலை மேலும் குறைவாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.