இந்தியாவில் அரசின் விதிகளை மீறி, பெரு வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதா அமேசான்? அதிர்ச்சி தகவல்கள்

இந்தியாவில் அரசின் விதிகளை மீறி, பெரு வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதா அமேசான்? அதிர்ச்சி தகவல்கள்

அமேசான்

33 அமேசான் விற்பனையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை வெளியிட வேண்டாம் என்று அவர் எச்சரிக்கப்பட்டார்.

  • Share this:
அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் அமைக்க இருப்பதாக அறிவித்த மறு நாளே இந்திய அரசின் விதிகளை மீறி, பெரு வணிகர்களுக்கு ஆதரவாக அந்நிறுவனம் செயல்படுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பெரிய நிறுவனங்களுள் ஒன்று தான் உலகின் நம்பர் 1 பணக்காரரான ஜெஃப் பீசோஸ் தலைமையில் செயல்பட்டு வரும் அமேசான்.

இந்நிறுவனம் இந்தியாவில் குறிப்பிட்ட பெரு நிறுவன விற்பனையாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது என்பது அந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. மேலும் சிறு வணிகர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு முறையும் இந்திய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தபோது அமேசான் அதன் நிறுவன கட்டமைப்புகளை முறைகேடாக மாற்றியமைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

2012 முதல் 2019 வரையிலான அமேசானின் ரகசிய ஆவணங்கள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஓபாமாவின் ஊடக செய்தித் தொடர்பு செயலராக இருந்தவர் Jay Carney. பின்னாளில் இவர் அமேசானின் கார்ப்பரேட் விவகாரங்களின் மூத்த துணைத் தலைவரானார். இவர் 2019ம் ஆண்டில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதருடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க இருந்தார். அப்போது என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதை அறிவுறுத்தும் விதமாக அறிக்கை ஒன்று அமேசான் நிர்வாகம் சார்பில் Jay Carneyயிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

அமேசான்


அதில், அமேசான் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளது என்பதையும், 4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய விற்பனையாளர்களுக்கு இது ஒரு ஆன்லைன் தளத்தை எவ்வாறு வழங்கியது என்பதையும் அவர் முன்னிலைப்படுத்த வேண்டும். ஆனால் 33 அமேசான் விற்பனையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை வெளியிட வேண்டாம் என்று அவர் எச்சரிக்கப்பட்டார்.

"முக்கியமான / வெளிப்படுத்தலுக்கு அல்ல." என அறிவுறுத்தப்பட்ட குறிப்பாக அது இருந்தது.

மேலும், இந்தியாவில் அதன் இரண்டு விற்பனையாளர்கள் - அமேசான் மறைமுக ஈக்விட்டி பங்குகளை வைத்திருந்த வணிகர்கள் என்றும் - 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அத்தளத்தின் விற்பனை வருவாயில் 35% பங்கைக் கொண்டிருந்தனர் என்று மற்றொரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் விதிமுறைகளை மீறி ஒரு சில பெரிய விற்பனையாளர்களுக்கு ஆதரவாக அமேசான் தங்கள் வணிகங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையில் அரசியல் ரீதியாக முக்கியமானவை. அது வெளியே வந்தால், இந்திய சிறு குறு வணிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

அமேசான் இந்தியாவின் இரண்டு பெரிய இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது, 2019 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் விற்பனையுடன் உள்ளது என்று ஃபாரெஸ்டர் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இந்திய தளத்தில் விற்பனையாளர்கள் சுதந்திரமாக வணிகம் செய்து வருவதாக அமேசான் கூறி வரும் நிலையில் பெரு விற்பனையாளர்களில் சிலரின் சரக்குகளில் அமேசான் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது இந்த ஆவணங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இந்திய அரசின் விதிகளை மீறி சிறு வணிகர்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அமேசான் நிறுவனம் செயல்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: