வங்கிகளின் டோல் ஃபிரீ மொபைல் எண்களைப் பயன்படுத்தி புதிய மோசடி நடந்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் டிபார்ட்மென்ட் ஆப் சூப்பர்விஷன் (Department of Supervision), மத்திய அலுவலக சைபர் பாதுகாப்பு மற்றும் ஐடி இடர் குழு (CSITE) ஆகியவை வழங்கிய நோட்டீஸை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்காக தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.
அதில் சமீபகாலமாக வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு வங்கிகளிலிருந்து அழைப்பது போல் பேசி ஏடிம் கார்டில் உள்ள ரகசிய குறியீடுகளை பெற்று பணத்தை பறிக்கும் ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சோசியல் மோசடி நடந்து வருகிறது.
சூப்பர்வைஸ்ட் என்டிட்டியின் (Supervised Entity) டோல் ஃப்ரீ எண்ணை போலவே மொபைல் எண்களைப் பயன்படுத்தி நடந்து வந்த மோசடி செயல்பாடுகளின் சில நம்பகமான உள்ளீடுகள் சூப்பர்விஷன் டிபார்ட்மென்டால் பெறப்பட்டன. மேலும் இந்த போலி மொபைல் எண்கள் ட்ரூ காலர் (TrueCaller) போன்ற அழைப்பாளர் அடையாள மொபைல் ஆப்களில் வங்கிகளின் பெயரில் பதிவு செய்யப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த போலி எண்களை ஒருவர் ட்ரு காலரில் தேடினால் வங்கிகளின் பெயரை காட்டுவது போல் மாற்றியமைத்து, மோசடி கும்பல் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
போலி டோல் ஃப்ரீ நம்பரை வைத்து எவ்வாறு மோசடி நடக்கிறது:
உதாரணத்திற்கு ஒரு வங்கியின் SE டோல் ஃபிரீ எண் 1800 123 1234 என்று வைத்துக்கொள்வோம். மோசடி செய்யும் கும்பல் உண்மையான எண்ணை ஒத்து இருப்பது போலவே ஒரு போலி எண்ணை 800 123 1234 பயன்படுத்தி இந்த மோசடி செயலை நடத்துகின்றன. வங்கி தொடர்பான சந்தேகங்களுக்கு டோல் பிரீ எண்ணை தொடர்பு கொள்ள விரும்பும் சந்தேகத்திற்கு இடமில்லாத வாடிக்கையாளர் 1800 123 1234 என்ற உண்மையான கட்டணமில்லா எண்ணுக்கு பதிலாக ட்ரூகாலர் பயன்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட மோசடியாளரின் எண்ணைத் (800 123 1234) தொடர்பு கொள்கிறார்.
அவ்வாறு பெறும் அழைப்பில் மறுமுனையில் பேசும் மோசடி நபர் வாடிக்கையாளர்களின் (அதாவது பாதிக்கப்பட்டவர்கள்) டெபிட் அல்லது கிரெடிட் கார்டு நம்பர், கடவுச்சொல், ஓடிபி போன்ற முக்கியமான விவரங்களை வழங்குமாறு கேட்டு, அதன் மூலம் பணத்தை திருடி வருகின்றனர். இது போன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்க நீங்கள் அழைக்கவிருக்கும் நிறுவனம் அல்லது வங்கியின் கட்டணமில்லா எண்ணை உறுதிப்படுத்துவது எப்போதும் நல்லது. மேலும் எந்தவொரு வங்கியும் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய விவரங்களை கேட்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.