முன்னணி சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்தாண்டு விலைக்கு வாங்கி பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். இதில், முக்கிய மாற்றமாக டிவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக் கணக்குகளை) வைத்திருப்பவர்களுக்கு இலவச சேவை தர முடியாது. அவர்கள் மாதம் சந்தா கட்ட வேண்டும் என அறிவித்தார்.
அதன்படி, டிவிட்டர் புளூவை பயன்படுத்துவதற்கு மாதாந்திர சந்தாவாக இணைய வழியில் பயன்படுத்த ரூ.650, செல்போன்களில் பயன்படுத்த மாதம் ரூ.900 செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி இணையம், IOS மற்றும் ஆண்டிராய்டு என 3 தளங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் இந்த சேவைகளை ஆண்டு சந்தாவாக ரூ.6,800 செலுத்தியும் பெற முடியும் என்றும் டிவிட்டர் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மற்ற முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் ப்ளூ டிக் பெற சந்தா முறை அறிமுகமாகியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் ( Meta) தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற இணையத்துக்கு மாதத்திற்கு 11.99 டாலரும் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கும் 14.99 டாலரும் சந்தா நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இந்த திட்டம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என மார்க் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிலும் ப்ளு டிக் சந்தா என்ற அறிவிப்பு இந்திய பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமீப காலமாக இந்தியாவில் இன்ஸ்டா பயன்பாடு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இந்த சூழலில் 11 டாலர் கட்டணம் என்றால் இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.1,000 வருகிறது. 15 டாலர் என்றால் ரூ.1,250ம் வருகிறது. மாதாமாதம் ப்ளூடிக் வசதிக்காக இந்த தொகையை கட்ட வேண்டுமான என்ற கேள்வி பல இந்திய பயனாளர்களின் மனதில் எழும் என்பதில் ஐயமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.