தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது, அதனை வாங்கி சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற யோசனை வரும். ஆனால், அனைவருக்கும் இந்த தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதம் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அவர்களின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவைகளைப் பொறுத்தே வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும் என்பதால், பர்சனல் லோன் எடுக்கும் முன் சில அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1. கடன் - வருவாய் விகிதம் :
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க திட்டமிடும்போது, ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கடன்களை முற்றிலுமாக கட்டிவிட வேண்டும் அல்லது பெருமளவு குறைத்துவிடுவது நல்லது. ஏனென்றால், தனிநபர் கடன் என்பது உங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து கொடுக்கப்படும். கடனுக்கும் - வருவாய்க்கும் உள்ள விகிதம் மிக குறைவாக இருந்தால், யாரும் கடன் தரமாட்டார்கள். குறிப்பாக, கடன் வைத்திருப்பவர்களுக்கு புதிய கடன் கொடுக்க முன் வரமாட்டார்கள்.
கடனும், ஈக்விட்டியும் 50 விழுக்காடுக்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்கும். இல்லையென்றால் கடன் கிடைக்க வாய்ப்பு மிக மிக குறைவு. அதாவது, உங்கள் மொத்த வருமானத்தில் கடன் செலுத்தும் மொத்த ஈ.எம்.ஐக்கள் 40 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு கடன் தேவையாக இருந்தால், நிலுவையில் இருக்கும் கடன்களை முன்கூட்டியே செலுத்துங்கள்.
2. கிரெடிட் ஸ்கோர் :
வங்கியில் கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியம். தனிநபர் கடன் என்பது செக்யூரிட்டி இல்லாமல் கொடுப்பதால், கடன் கொடுப்பவர்கள் உங்களின் திருப்பிச் செலுத்தும் திறனை அறிந்து கொள்வதற்காக கிரெடிட் ஸ்கோரை பார்ப்பார்கள். 725 -க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் நீங்கள் பொறுப்பாக கடனை திரும்பச் செலுத்துபவர் என்பதை குறிக்கிறது.
800க்கும் மேல் இருந்தால் மிகச் சிறந்த கிரெடிட் ஸ்கோர். தாரளமாக கடன் கொடுக்கலாம். திரும்பச் செலுத்துவிடுவார் என்பதை இந்த புள்ளிகளை வைத்து முடிவெடுத்துவிடுவார்கள். 725 புள்ளிகளுக்கும் கீழாக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு சுத்தமாக கடனை திருப்பிச் செலுத்தும் வரலாறு இல்லை என்று அர்த்தம். அதிக ஆபத்துள்ள கடனாளார் என்பதையும் குறிக்கும். அதனால், உங்களின் கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலையில் பராமரியுங்கள்.
3. வருவாய் ஆதாரம் :
தனிநபர் கடன் கொடுப்பவர்கள், ஒருவருக்கு வரும் அனைத்து மாதாந்திர வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். இதனால், வீட்டு வாடகை, மாத சம்பளம், பகுதிநேர வருமானம் உள்ளிட்ட அனைத்து வருமான ஆதாரங்ளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வீடு, கார், தங்கம் போன்ற பிணையம் வைத்து கொடுக்கப்படும் கடன்போல் பர்சனல் லோன் இல்லை. இது உத்திரவாதம் ஏதும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் கொடுக்கப்படும் கடன். எனவே, திருப்பிச் செலுத்துவதற்கான அனைத்து ஆதாயங்களும் இருக்கிறது என்பதற்கான சான்றுகளை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Also read... நெருங்கும் தீபாவளி பண்டிகை - விநியோக பற்றாக்குறையில் சிக்கிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்!
4. ஒரே நேரத்தில் பல கடன்கள் :
நீங்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடன்களுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு முயற்சி செய்வது கடன் கொடுப்பவர்களுக்கு தெரிந்தால், அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் உங்களை அணுகுவார்கள். மேலும், தனிநபர் கடன்கள் கொடுக்க முன் வருபவர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போதெல்லாம் ஆவணங்களைக் கடந்து, உங்களை பற்றி விசாரணையையும் மேற்கொள்வார்கள். மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஏன் குறைவாக இருக்கிறது என்ற ஆய்வு செய்வார்கள். அப்போது, ஏற்கனவே வேறு இடங்களில் கடன் வாங்கி திரும்ப செலுத்திய வரலாறு, அல்லது திரும்ப செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வார்கள். இதன்மூலம் நீங்கள் கடன் வாங்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறீர்கள் என முடிவு செய்து, உங்களின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
5. கடன் வழங்குபவரை தேர்ந்தெடுத்தல் :
கடன் வழங்குபவரை நீங்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வருமானம், வட்டி விகிதம், மாதாந்திர ஈ.எம்.ஐக்களுக்கு உகந்த வாய்ப்புகளை கொண்டிருக்கும் கடன் வழங்குவபரை தேர்ந்தெடுத்து கடனுக்கு விண்ணப்பியுங்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுவார்கள். வங்கிக்கு வங்கி தனிநபர் கடனுக்கான அளவுகோல் மாறும் என்பதால், இவற்றை நினைவில் வைத்து கடன் வாங்குவது உங்களுக்கு நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.