Home /News /business /

உயில் தயார் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்...

உயில் தயார் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்...


உயில்

உயில்

ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவரது சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கான முக்கிய வழிகாட்டியாக விளங்குகிறது உயில்.

    பல சொத்துக்கள் வைத்திருந்தாலும் சரி, குறைந்த சொத்துக்களை வைத்திருந்தாலும் சரி. சொத்துக்கு உரிமை உடையவர்கள் அவர்களது மறைவிற்கு பின் ஏற்படும் சச்சரவுகளை தடுக்க உயில் எழுதுவது மிகவும் முக்கியம்.

    ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவரது சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கான முக்கிய வழிகாட்டியாக விளங்குகிறது உயில். உயில் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை உருவாக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிய விப்பிலுணர்வு இன்னும் பலருக்கு சரியாக ஏற்படவில்லை. இதனால் நம் நாட்டில் வாரிசுகளுக்கிடையேயான சொத்து சண்டை கடைசியில் கொலை வரை கூட சென்று முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் அல்லது உங்கள் சொத்தில் பங்கு பெற விரும்பும் வேறு எவருக்கும் உங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதற்கான உங்கள் திட்டங்களை ஆவணப்படுத்தி கோடிட்டு காட்டும் ஒரு சட்டக் கருவிதான் உயில்.

    தவிர உயிலானது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் உடைமைகள் (நகைகள், வங்கி இருப்பு மற்றும் பிற) நீங்கள் மறைந்த பிறகு, உங்கள் விருப்பப்படி, சரியான நபர்களின் கைகளில் இருக்கும் என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்து நிம்மதியாக இருக்க உதவும். எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உயிலை உருவாக்கும் போது ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே...

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    உயில் எழுத உங்கள் முழு பெயர், வயது, வசிக்கும் முகவரி மற்றும் பெற்றோரின் பெயர் போன்ற உங்களின் முழு தனிப்பட்ட விவரங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உயிலின் எந்த இடத்திலும் வார்த்தைகள் அல்லது சொல்லை சுருக்கமாக குறிப்பிட வேண்டாம். மாறாக உயிலை எழுதும் போது உங்கள் விவரங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள், நீங்கள் சுயநினைவுடன் இருக்கிறீர்கள் மற்றும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

    சொத்துக்களை அடையாளப்படுத்தல்:

    உங்களிடம் நிதி ரீதியாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை முதலில் முழுமையாக அடையாளம் காணுங்கள். இதில் உங்கள் வங்கி கணக்குகள், லாக்கர்கள், காப்பீட்டுக் கொள்கைகள், பங்கு முதலீடுகள், பரஸ்பர நிதிகள் அல்லது பத்திரங்கள் மற்றும் PPF மற்றும் EPF போன்ற ஓய்வூதிய நிதிகள் உள்ளிட்டவையும் அடங்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் என்ன சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

    உயிலை செயல்படுத்துபவர்:

    நீங்கள் உயிலில் எழுதி வைக்கும் விருப்பம் உங்கள் மரணத்திற்கு பின் தான் நடைமுறைக்கு வரும் என்பதால், உங்கள் மறைவிற்கு பிறகு அதனை சரியாக செயல்படுத்த உங்களுக்கு நம்பிக்கையான ஒரு Executor-ஐ அதே உயிலில் குறிப்பிடுங்கள். அவர் குறிப்பிட்ட உயிலை நிறைவேற்றி அதன் வழிமுறைகளை உங்கள் மறைவுக்குப் பிறகு சரியாக செயல்படுத்த வேண்டும். குழப்பத்தைத் தவிர்க்க Executor-ன் பெயர், முகவரி மற்றும் அவர்களுடனான உங்கள் உறவு மற்றும் அவரின் முழு விவரங்களையும் உயிலில் குறிப்பிட வேண்டும்.

    பயன் பெறுவோர் பட்டியல்:

    உங்கள் சொத்துக்களை அனுபவிக்க தகுதி உள்ள குடும்ப உறுப்பினர்கள் அல்லது தனிநபர்களின் பெயர்களை பட்டியலிடுங்கள். அவர்களின் பெயர்களை பட்டியலிடும் போது புனைப்பெயர்களை தவிர்த்து அவர்களின் இயற்பெயர் அல்லது முழுபெயரை பயன்படுத்துங்கள்.அவர்களின் முகவரிகள், அதிகாரப்பூர்வ பிறந்த தேதி மற்றும் அவர்களுடனான உங்கள் உறவு போன்ற விவரங்களைச் சேர்க்கவும். நீங்கள் எந்த விகிதத்தில் சொத்துக்களை பிரிக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்த பிறகு, தெளிவான வழிமுறையில் சொத்துக்களை சட்ட நிபுணர்களின் உதவியுடன் பிரித்து உயில் எழுதுங்கள்.

    சாட்சிகள்:

    உயில் தயாரானதும் உங்கள் சொத்துக்களில் பங்கு கொடுக்கப்படாத குறைந்தபட்சம் 2 நபர்கள் முறையாக கையொப்பமிட்டு, தேதியிட்டு சாட்சியமளித்திருப்பதை உறுதிசெய்யவும். சரியான கையொப்பம் மற்றும் தேதி இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அதே போல சாட்சிகள் உயிலில் எழுதப்பட்டிருக்கும் உங்கள் விருப்பத்தைப் படித்து அதன் உள்ளடக்கங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் கையொப்பம் மற்றும் தேதிகள் தேவைப்பட்டாலும், கடைசிப் பக்கத்தில் உங்கள் கையொப்பம் மட்டும் இல்லாமல் சாட்சிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

    அதே போல உங்களின் சொத்துக்கள் மற்றும் தேதிகளின் சமீபத்திய புதுப்பிப்புகளுடன் உங்கள் உயிலை புதுப்பித்து கொள்ளுங்கள். அவ்வப்போது மறுபரிசீலனை செய்வது உயில் எழுதுவதை போலவே முக்கியமானது. முந்தைய உயிலை ரத்து செய்து விட்டு உயிலை புதுப்பிக்க வேண்டும். இல்லை என்றால் அவை குழப்பத்தை உருவாக்கலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Property

    அடுத்த செய்தி