ஒரே வண்டியை பெட்ரோலிலும் ஓட்டலாம், சார்ஜ் செய்தும் ஓட்டலாம் - இளைஞரின் அசத்தல் வடிவமைப்பு!

ஒரே வண்டியை பெட்ரோலிலும் ஓட்டலாம், சார்ஜ் செய்தும் ஓட்டலாம் - இளைஞரின் அசத்தல் வடிவமைப்பு!

Omkar

அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றத்தினால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் பல்வேறு சந்தேகங்களுடன் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கு முற்றிலும் மாறுவது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

  • Share this:
சுற்றுசூழல் மாசை கட்டுப்படுத்துவது மற்றும் எரிபொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவித்து வருகிறது. மேலும் மின்சார வாகனங்கள் வாங்கும் மக்களுக்கு மானியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் மின்சார வாகன சந்தை 129% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், வரும் காலங்களில் இந்திய வாகன சந்தையில் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றத்தினால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் பல்வேறு சந்தேகங்களுடன் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கு முற்றிலும் மாறுவது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு பதிலாக, தற்போது இருக்கும் வாகனத்திலேயே எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் என 2 விருப்பங்களும் கிடைத்தால் எப்படி இருக்கும்.? ஆம் இதை சாத்தியப்படுத்தி உள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஓம்கர் தலே என்பவர்.

இவர் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றி அசத்தியுள்ளார். 31 வயதான மென்பொருள் பொறியாளரான இவர் ஹோண்டா ஆக்டிவா வண்டியை பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் செயல்படும் எலக்ட்ரிக் வாகனம் என இரண்டுமாக மாற்றி உள்ளார். இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு சிறிய கேரேஜில் இதற்கான முயற்சியை ஒரு பொழுதுபோக்காக துவங்கி உள்ளார். இவரது கன்டுபிடிப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் வண்டியை ஒட்டி கொண்டே பெட்ரோல் மற்றும் மின்சாரத்திற்கு இடையில் பயன்முறைகளை மாற்றிக்கொள்ள முடியும்.

உதாரணமாக பெட்ரோல் தீர போகிறது என்றால் ஏற்கனவே வண்டியை சார்ஜ் செய்திருந்தால், பயமின்றி டக்கென்று எலக்ட்ரிக் மோடிற்கு மாற்றி கொள்ள முடியும். அதே போல சார்ஜ் தீர்ந்து விட்டாலும் வண்டியில் பெட்ரோல் இருந்தால் பெட்ரோல் மோடிற்கு மாற்றி பயணத்தை தொடரலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 85 கி.மீ வரை பயணிக்க முடியும். வாகனம் மின்சாரத்தில் இயங்கும் போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்று கூறியுள்ளார் ஓம்கர் தலே.

தனது கண்டுபிடிப்பு இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் சர்வதேச தொழில்நுட்ப மையம் (ICAT) ஆகியவற்றின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மேலும், புதிய எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை வாங்குவதை விட பெட்ரோல் வாகனத்தை இது போல மறுசீரமைப்பதற்கான செலவு 40% குறைவாகும். மேலும் நச்சு உமிழ்வைக் குறைக்க இது உதவும் என்று கூறியுள்ளார் ஓம்கர்.

``நீண்ட நாட்கள் அலுவலகத்திற்கு காரில் சென்ற பொது எரிபொருளுக்காக ஆகும் செலவுகளை பார்த்து மலைத்தேன். மேலும் வாகனத்தில் எரிபொருள் நிரப்ப காத்திருக்கும் நேரமும் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதற்கான தீர்வை குழந்தை பருவ பொழுதுபோக்குகளால் தூண்டப்பட்ட ஒரு யோசனை மூலம் காண நினைத்து செயலில் இறங்கினேன். இரவு ஷிப்டுகளில் வேலை செய்த நேரம் போக பகலில் இதற்கான பணிகளை மேற்கொண்டேன்” என தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆக்டிவா வண்டியை வாங்கியதாக கூறினார்.

சிறப்பாக செயல்படும் மின்சார இருசக்கர வாகனம் வாங்க குறைந்தபட்சம் ரூ .1 லட்சம் செலவாகும், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனத்தின் விலை கிட்டத்தட்ட ரூ .80,000 ஆகும். இதற்கு மலிவான தீர்வாக இவை இரண்டும் கலந்த வாகனதிற்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையே செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

தான் உருவாகியுள்ள தொழில்நுட்பம் நம்பிக்கைக்குரியது. விற்பனையில் ஏராளமான எலக்ட்ரானிக் வாகனங்கள் இருந்தாலும் சார்ஜ் செய்தால் அவை போகும் தூரம் மற்றும் அதன் உள்கட்டமைப்பு குறித்து வாங்குபவர்களிடையே இன்னும் தயக்கம் உள்ளது. ஏற்கனவே உள்ள பெட்ரோல் வாகனத்தில் தனது புதிய கண்டுபிடிப்பான ரெட்ரோஃபிட் கிட் சேர்ப்பது மக்கள் விரும்பும் மிகவும் சாத்தியமான விருப்பமாக இருக்கலாம். பேட்டரி தீர்ந்து விட்டால் பெட்ரோல் மோடிற்கு மாறி கொள்ளலாம். தவிர எரிபொருள் செலவில் நிறைய சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் ஓம்கர்.
Published by:Ram Sankar
First published: