இந்தியாவில் உள்ள யமஹா மோட்டார்ஸ் தனது புதிய மாடலான யமஹா FZS-Fi பைக்கை புதுப்பித்த ஸ்டைலிங்குடன் புதிய ரேஞ்ச்-டாப்பிங் வேரியண்டான FZ-S DLX உடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. நீண்ட காலமாக இயங்கி வரும் FZ-S மாடல் இந்திய சந்தையில் யமஹாவின் சிறந்த விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய அப்கிரேட் செய்யப்பட்டுள்ள ஸ்டைலிங் மூலம், இந்நிறுவனம் அதன் விற்பனையை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யமஹா 2022 FZS-Fi மாடல் பைக்கின் விலை ரூ. 1.16 லட்சமாக ஷோரூமில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் DLX மாடலானது ரூ.1.19 லட்சமாக உள்ளது. புதிய 150சிசி மோட்டார் பைக்கை வாங்க நீங்கள் விரும்பினால், யமஹா FZS-Fi மாடல் வண்டி சிறந்த தேர்வாக இருக்கும். இதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை இனி பார்ப்போம்.
யமஹா FZ-S Fi 2022 நிறங்கள்
யமஹாFZS-Fi மாடலானது மேட் ரெட் மற்றும் டார்க் மேட் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அடுத்ததாக DLX மாடலானது மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் கிரே மற்றும் மெஜஸ்டி ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படுகிறது. யமஹா வண்டியை வாங்க விரும்புவோருக்கு இதில் பிடித்த நிறத்தை தேர்வு செய்யலாம்.
மைலேஜ்
யமஹா 2022 FZS-Fi மாடல் லிட்டருக்கு 45 கிமீ வரை எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது என்று யமஹா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சாலையின் நிலை மற்றும் பிற காரணிகளின் பொறுத்து இது மாறுபடலாம். வாகனத்தின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர் அளவாகும்.
இன்ஜின் மற்றும் சஸ்பென்ஷன்
யமஹா FZS-Fi வண்டியில் BS6 வகை இணக்கமான காற்று-குளிரூட்டப்பட்ட 149cc வசதியுடன், சிங்கிள்-சிலிண்டர் ஃப்யூவல்-இன்ஜெக்டட் "ப்ளூ கோர்" இன்ஜின் வழங்கப்படுகிறது. இதில் 12.2 bhp வெளியீட்டையும் 13.3 Nm இன் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்க இது டியூன் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக் 5.6 வினாடிகளில் 0 முதல் 60 வரை அக்சிலரேட் ஆகி, 115 கிமீ வேகம் வரை செல்லும். இதன் இரு முனைகளிலும் 17-இன்ச் உலோகக் கலவைகள் மற்றும் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 11330 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. சஸ்பென்ஷன் பொருத்த வரை, டெலிஸ்கோப் பிரண்ட் போர்க் மற்றும் ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் ரியர் மோனோ-ஷாக் மூலம் ஹேண்டில் செய்யப்படுகிறது.
Also read... விபத்துகளை குறைக்க புதிய டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிசான்!
மற்ற அம்சங்கள்
இந்த மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட் தரப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் கம்பார்ட்மெண்டலைஸ் செய்யப்பட்ட தளவமைப்பு உள்ளது. சிறந்த ஒளித் திட்டத்துடன் கூடிய ரிபிலக்டர், உயர் மற்றும் குறைந்த பீம்களை கொண்ட தனி பல்புகளை இதில் தந்துள்ளனர். FZS-fi ரைடர்களுக்கு சிறந்த வசதியை வழங்குவதற்காக கூடுதல் குஷனிங் கொண்ட இரண்டு-நிலை இருக்கையுடன் வருகிறது. குறிப்பாக பில்லியன் இருக்கை 16% பெரிய இருக்கை பரப்பை பெற்றுள்ளது. மேலும் இடுப்பு பகுதியில் 26 மிமீ அகலம் மற்றும் கூடுதல் வசதிக்காக 5 மிமீ தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனத்தில் புளூடூத் இணைப்பு, மல்டி-ஃபங்க்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி ஹெட்லைட், டயர் ஹக்கிங் ரியர் மட்கார்ட் மற்றும் குறைந்த எஞ்சின் கார்டு ஆகிய இரண்டு வகைகளிலும் நிலையான அம்சங்களாக உள்ளது. பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் உடன் இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தாக DLX வேரியண்டில் LED ஃப்ளாஷர்கள் மற்றும் தனித்துவமான கிராபிக்ஸ், வண்ண அலாய் வீல்கள், இரட்டை டோம் இருக்கை ஆகியவற்றை கூடுதலாக தந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Yamaha