சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், கண்டிஷன் சரி இல்லாத வாகனங்களால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன ஸ்கிராப் பாலிசி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, பழைய வாகனங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தாமல், மறுசுழற்சி செய்துவிட வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் நோக்கம் ஆகும்.
குறிப்பாக, வாகனப் பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன வாகனங்களை மறுசுழற்சி செய்துவிட வேண்டும் என்று இந்தப் பாலிசி பரிந்துரை செய்கிறது. குறிப்பாக, டெல்லியில் 10 ஆண்டுகளைக் கடந்த டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளைக் கடந்த பெட்ரோல் வாகனங்களையும் ஸ்கிராப் செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், டெல்லியில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படாத வாகனங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்று அங்கு பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனினும், அரசு நிர்ணயம் செய்யும் பிட்னஸ் டெஸ்ட் விதிமுறைகளை அது பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், புதிய வாகனங்களை பதிவு செய்ய செலுத்தும் கட்டணத்தைக் காட்டிலும், பழைய வாகனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் 8 மடங்கு கூடுதலாகும்.
வாகன உற்பத்தி துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கனரக வர்த்தக வாகனங்களுக்கும் 2023ஆம் ஆண்டில் இருந்து பிட்னெஸ் டெஸ்ட் என்பது கட்டாயம் ஆகும். அதே சமயம், தனியார் வாகனங்கள் மற்றும் இதர அமைப்புகளின் வாகனங்களுக்கு இந்த சோதனை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கட்டாயம் ஆகும்.
வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி என்றால் என்ன?
1. நாட்டில் வரையறுக்கப்பட்ட காலாவதி ஆண்டுகளைக் கடந்தும் இயங்குகின்ற வாகனங்கள் கட்டாயமாக பிட்னெஸ் டெஸ்ட்க்கு செல்ல வேண்டும்.
2. என்ஜின் கண்டிஷன், அதை புகை வெளியேற்ற அளவு மற்றும் எரிபொருள் பயன்பாட்டு திறன், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இதில் ஆய்வு செய்யப்படும்.
* பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களின் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, அதுபோன்ற வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும்.
* இந்தக் கொள்கையின்படி 10 ஆண்டுகளைக் கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளைக் கடந்த தனியார் வாகனங்களுக்கு பிட்னெஸ் டெஸ்ட் அவசியமாகும்.
* பிட்னெஸ் டெஸ்டில் பாஸ் செய்த வாகனங்களில் ஐசி என்ஜின் மாற்றம் செய்த பிறகு, அடுத்த சில நாட்களில் அதை போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
* ஸ்கிராப் செய்ய வேண்டிய பழைய கார்களை கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக புதிய கார்களை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் டிஸ்கவுண்ட் பெறலாம்.
* ஸ்கிராப் வாகனங்களை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய வாகனங்களுக்கான சாலை வரியில் 25 சதவீதம் வரையிலும், வர்த்தக வாகனங்களுக்கான சாலை வரியில் 15 சதவீதம் வரையிலும் சலுகை அளிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.