Budget 2021 | பழைய வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு சலுகை தரப்போகும் மத்திய அரசு? - Voluntary Vehicle Scrappage Policy-யினால் என்ன நன்மை?

Budget 2021 | பழைய வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கு சலுகை தரப்போகும் மத்திய அரசு? - Voluntary Vehicle Scrappage Policy-யினால் என்ன நன்மை?

‘Voluntary Vehicle Scrappage Policy’

புதிய Vehicle Scrappage கொள்கையின்படி அனைத்து தனியார் வாகனங்களும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிட்னஸ் சோதனைகளையும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக வாகனங்களையும் பரிசோதிக்க வேண்டும்

  • Share this:
2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னார்வ வாகன ஸ்க்ராப்பேஜ் என்ற கொள்கையை அறிவித்தார். ஆட்டோமொபைல் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக பார்க்கப்படும் இந்த அறிவிப்பை இத்துறையினர் பாராட்டி வருவதுடன் வாகன விற்பனைக்கு இத்திட்டம் பெரும் ஊக்கத்தை அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.

‘Voluntary Vehicle Scrappage Policy’ கொள்கை என்பது பழைய வாகனங்களை புதிய வாகனங்களுடன் மாற்ற உதவும் ஒரு திட்டமாகும். இது வாகன உரிமையாளர்களை 15 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களை அகற்றவும், அதற்கு பதிலாக புதிய வாகனம் வாங்கவும் ஊக்குவிக்கிறது.

பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் போது பணமாகவோ அல்லது வரி அடிப்படையிலோ அரசே சலுகை அளிக்க உள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்கையின்படி மூலம் இனி கார், பைக் உட்பட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை காலகட்டம் 20 ஆண்டுகள் எனவும் வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தனிநபர் பயன்படுத்தும் கார் என வைத்துக்கொண்டால் அவற்றை 20 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம், இக்காலத்திற்கு பிறகு அவற்றிற்கு ஃபிட்னஸ் சோதனை அவசியமாக்கப்படும்.

Vehicle Scrappage Policy


கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தற்போது 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனையானது ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இனி இவ்வாறான வாகனங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும்.

இதன் மூலம் நுகர்வோர்கள் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்கள் வாங்க உந்து சக்தி கிடைக்கிறது. மேலும் பழைய வாகனங்கள் சாலைகளில் இருந்து அகற்றப்படும் போது காற்று மாசு நீங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.

இது எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையினரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என இத்துறையினர் பாராட்டி வருகின்றனர். தற்போது பிஎஸ் தரத்தில் வெளிவரும் புதிய வாகனங்கள் தூய்மையானவை மற்றும் கடுமையான உமிழ்வு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: