Home /News /automobile /

டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட பழைய வாகனங்கள் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது - ஏன் தெரியுமா?

டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட பழைய வாகனங்கள் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது - ஏன் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

நாட்டிலேயே மிக, மிக அதிகபட்ச மாசுபாடு டெல்லியில் தான் நிலவுகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் போன்றவை இதற்கு காரணமாக உள்ளன.

டெல்லியில் பயன்படுத்தப்பட்ட 10 முதல் 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களையும் பிற மாநிலங்களில் விற்பனை செய்து கொள்ள ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்குமாறு டெல்லி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் பிற மாநிலங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

டெல்லியில் பயன்படுத்தக் கூடாது என அனுமதி மறுத்துவிட்டு, அதை ஏன் பிற மாநிலங்களில், அதுவும் 10, 15 ஆண்டு பழமையான வாகனத்தை விற்பனை செய்ய அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதில் எழுந்திருக்கும். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இந்தச் செய்தியின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாகனங்களின் கரும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குரல் ஒரு புறம் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், நாம் இன்றைய நாள் வரையிலும் பெட்ரோல், டீசல் வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அதே சமயம், பழைய வாகனங்களில் அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் இருக்கிறது என்ற காரணத்தால், புகை வெளியேற்றத்தை பெருமளவுக்கு கட்டுப்படுத்தக் கூடிய புதிய வகை என்ஜின்களை நாம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம்.

வாகனத்தின் புகை அளவை மையப்படுத்தி பிஎஸ்-1, பிஎஸ் -2 என தொடங்கிய என்ஜின்களை பயன்படுத்த தொடங்கி, தற்போது பிஎஸ்-6 வரை வந்துள்ளோம். அதிலும், பிஎஸ்-4 வரையிலான என்ஜின் எடிசன்களை கொண்ட வாகன உற்பத்திக்கும், புதிய வாகனங்களின் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் பெரும்பாலான வாகனங்கள், புகை வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்-6 வகை என்ஜின்கள் கொண்டதாகும்.

டெல்லியில் ஏன் தடை செய்யப்படுகிறது

நாட்டிலேயே மிக, மிக அதிகபட்ச மாசுபாடு டெல்லியில் தான் நிலவுகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் போன்றவை இதற்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு டெல்லியில் மாசுபாடு அதிகம். இதனால், அதனை கட்டுப்படுத்த எண்ணற்ற முயற்சிகளை டெல்லி யூனியன் பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வாகன புகைமூட்டம் 100 சதவீதம் இல்லாத எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகம் 100-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கி வருகிறது.

Also read... இந்தியாவில் விற்பனைக்கு வந்தது 2022 Jeep Compass Trailhawk... முந்தைய மாடலைவிட பல மடங்கு சிறப்பு அம்சங்கள்...

இந்நிலையில், அதிக புகையை வெளியேற்றும் பழைய என்ஜின்களை கொண்ட, 10, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் பதிவு எண்களை அரசு ரத்து செய்துள்ளது. அதாவது, அந்த வாகனங்களை அங்கு சாலையில் இயக்க அனுமதி கிடையாது. மிக, மிக, பழைய கார்களை ஸ்க்ரேப் (பழைய இரும்பு) செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஓரளவு கண்டிஷன் உள்ள 10, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை, வாகன ஓட்டுநர்கள் விற்பனை செய்துவிட்டு, புதிய வாகனம் வாங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும் விதமாக, அவற்றை பிற மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான தடையில்லா சான்று வழங்கப்படுகிறது. அதே சமயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அல்லது பகுதிகளில் இந்த வாகனங்களை விற்க அனுமதி கிடையாது. அதே சமயம், தொடர்புடைய மாநிலங்களின் போக்குவரத்து துறை அதிகாரிகள், இந்த வாகனங்களை பதிவு செய்து கொள்ள மறுத்தால், தடையில்லா சான்று ரத்து செய்யப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி