போக்குவரத்து காவலர்கள் என்றால் வாகனங்களை மடக்கிப் பிடித்து, ஸ்பாட் ஃபைன் (அபராதம்) வசூல் செய்யும் காட்சிகளைத் தான் நாம் பார்த்திருப்போம். அதுவே, அபராத தொகை சற்று அதிகமாக இருந்தால், கையில் ரசீதை வழங்கி, ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்துவார்கள். ஆனால், போக்குவரத்து அபராதத் தொகையில் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் செய்தியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல்துறை இந்த வாய்ப்பை வழங்குகிறது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என்று ஹைதராபாத், சைதராபாத் மற்றும் ரச்சகொண்டா நகரங்களில் உள்ள போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து துறை விதித்த அபராதங்களில் ரூ.600 கோடி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம், கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, வாகன ஓட்டிகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சூழலில், அவர்களுக்கு மனிதாபிமான முறையில் இந்த சலுகை அளிக்கப்படுகிறது என்று ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்கவுண்ட் தொகை எவ்வளவு
புதிய விதிகளின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள், மொத்த அபராத தொகையில் 25 சதவீதத்தை செலுத்தினால் போதுமானது. கார், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்களுக்கும், கனரக வாகனங்களுக்கும் 50 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டுள்ள, சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் உரிமையாளர்கள் 30 சதவீத நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. எஞ்சியுள்ள தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் டிஸ்கவுண்ட் பெற வேண்டும் என்றால், ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதே சமயம், குறிப்பிட்ட கால வரையறைக்குள் அபராதம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே டிஸ்கவுண்ட் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை நிலுவை வைத்துள்ள குடிமக்களுக்கு, இது ஒன்-டைம் டிஸ்கவுண்ட் அல்லது சலுகை ஆகும்.
Also read... 2022 மாருதி சுசுகி பலேனோ: 25,000 முன்பதிவுகளை கடந்தது... விலை என்ன தெரியுமா?
எப்போது அபராதம் செலுத்தலாம்
டிஸ்கவுண்டுடன் கூடிய சிறப்பு அபராதம் செலுத்தும் முகாம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஒரு மாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகள் தங்கள் நிலுவை தொகையை செலுத்திவிட வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சலுகை வழங்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்தி விடுவார்கள் என்று கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Traffic Police