டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM), டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் (TKAP) மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் இன்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (TIEI) உள்ளிட்ட டொயோட்டா குழும நிறுவனங்கள் பவர்டிரெய்ன் பார்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பிற உதிரிபாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காக சுமார் ரூ.4,800 கோடியை கர்நாடகாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
கர்நாடகாவில் டொயோட்டா குழுமம் ரூ.4,800 கோடி முதலீடு செய்ய உள்ள தகவலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதிப்படுத்தி உள்ளார். Toyota Group of Companies உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். டொயோட்டா நிறுவனம் கர்நாடகாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யவுள்ளது. மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்த நினைக்கும் அரசின் முயற்சிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றொரு மைல்கல்லாக அமைந்து உள்ளது என ட்வீட் செய்து உள்ளார் பசவராஜ் பொம்மை.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் ரூ4,100 கோடி முதலீடு செய்ய உள்ள நிலையில் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் இன்ஜின்ஸ் இந்தியா மேலும் ரூ.700 கோடியை கர்நாடகாவில் முதலீடு செய்ய உள்ளது. TKM மற்றும் TKAP ஆகிய இரு நிறுவனங்களும் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசுடன் கையெழுத்திட்டுள்ளன. கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் முருகேஷ் ஆர் நிராணி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் முன்னிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும்TKM இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த முதலீடு தொடர்பாக பேசியுள்ள TKM நிர்வாக துணைத் தலைவர் விக்ரம் குலாட்டி, 'go green, go local' என்ற கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். மேலும் கார்பன் உமிழ்வை வேகமாக குறைப்பது மற்றும் மேக் இன் இந்தியா ஆகிய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுவதே இந்த பெரிய முதலீட்டு திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்து உள்ளார். மேலும் பேசிய விக்ரம் குலாட்டி, உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய கர்நாடகாவில் தற்போதுள்ள ஆலைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
Also Read : இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள் - இதோ விவரம்!
நாங்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளை இலக்காக கொண்டுள்ளோம். மின்மயமாக்கப்பட்ட பவர்டிரெய்ன் பார்ட்ஸ் (electrified powertrain parts) என்ற தொழில்நுட்பத்தின் முற்றிலும் புதிய பகுதியை நோக்கி நகர்கிறோம். உற்பத்தியை தொடங்குவதற்கான காலக்கெடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் சுமார் 3,500 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார். மேலும் எங்களது இந்த முதலீடு எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் பார்ட்ஸ் மற்றும் காம்பொனென்ட்ஸ்களை உருவாக்க உள்ளூர் உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தும். இதன் மூலம் இந்தியாவில் மின்மயமாக்கப்பட்ட வாகன உற்பத்தி பூர்த்தி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.