இன்னும் சில ஆண்டுகளில் மின்சார வாகனங்கள், முழுமையாக வாகன சந்தையை நிரப்பிவிடும் என்று கூறினால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. பெட்ரோல், டீசல் விலை, பொருளாதார சிக்கலுக்கு வழிவகுப்பதால், அதனை கணக்கிட்டு மின்சார வாகனங்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை முக்கிய காரணமாக இருப்பதால், உலக நாடுகளும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. பிரிட்டன் 2040 -க்குள் எரிபொருள் வாகன உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தற்போது 2030 ஆக குறைத்துள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால் எரிபொருள் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் சிறந்தவையாக இருக்கின்றன. ஏன்? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
குறைந்த பராமரிப்பு செலவு
பெரும்பாலான கார்கள் லோன்களில் வாங்கப்படுவதால், பராமரிப்பு செலவு என்பது கூடுதலாக இருக்கக்கூடாது என நினைப்பார்கள். பெட்ரோல், டீசல் கார்களுடன் மின்சார வாகனங்களை ஒப்பிட்டால், இவற்றின் பராமரிப்பு செலவு மிகமிக குறைவாக உள்ளது. தினசரி எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டிய தேவை இருக்காது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருப்பது போன்ற எஞ்சின் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை. வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது பராமரிப்பு செலவு 50 விழுக்காடு, அதாவது பாதியாக மட்டுமே இருக்கும். எலக்ட்ரானிக் வாகனங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும், எதனால் பாதிப்பு என்ற தரவும் இருக்கும் என்பதால், கார் உரிமையாளர்கள் பிரச்சனைகளை சரிசெய்வது மிகவும் எளிது.

மின்சார வாகனங்கள்
பேட்டரிகளை மாற்றிக்கொள்ளலாம்
மின்சார வாகனங்களுக்கு பிரச்சனையாக கூறப்படுவது பேட்டரிகள் தீர்ந்துவிட்டால், எங்கு சார்ஜ் செய்வது? அதற்கான கட்டமைப்புகள் இல்லையே? என்பதுதான். தற்போதைய நிலையில் கட்டமைப்புகள் இல்லையென்றாலும், வரும் காலங்களில் அதற்கான கட்டமைப்புகள் நிச்சயம் உருவாக்கப்படும். அதேவேளையில், பேட்டரிகள் மூலம் கார்கள் இயங்குவதால், ஒன்று தீர்ந்தவுடன் சார்ஜ் உள்ள மற்றொரு பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம். மேலும், ஒரே கம்பெனி பேட்டரியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமான எனில், அதற்கும் மாற்றுவழிகள் உள்ளன.
மென்மையான ஓட்டுநர் அனுபவம்
பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதை காட்டிலும், மின்சார வாகனங்களின் இயக்கம் மென்மையாக, ஸ்மூத்தாக இருக்கின்றன. அதிக ஒலி எழுப்புவதில்லை. வழக்கமான வாகனங்கள் எழுப்பும் ஒலியுடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனங்களின் சத்தம் மிக மிக குறைவாக இருக்கிறது. பயணத்தின்போது பிரேக் அடிப்பதன் மூலமும் மின்சார வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்
கூடுதல் Resale மதிப்பு
நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு ஏற்ப, வாங்கிய மதிப்பில் இருந்து விலை குறைத்து சந்தை மதிப்பு கணக்கிடப்படும். அதற்கு காரணம், வாகனத்தில் உள்ள வால்வு, ஸ்பார்க் பிளக், கிளட்ச் உள்ளிட்ட பொருட்களின் இயக்கம் மற்றும் தரத்தை கணக்கிட்டு, அவற்றுக்கு செய்ய வேண்டிய பராமரிப்பு செலவுகளும் கணக்கிட்டு வாகனத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வார்கள். ஆனால், மின்சார வாகனங்களில் பராமரிப்பு செலவு மிக மிக குறைவு என்பதால், பெரும்பாலான பொருட்களின் தரம் குறைய வாய்ப்புகள் இல்லை. அதனால், வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு கூடுதலாக இருக்கும்.

மின்சார வாகனங்கள்
மாசு உமிழ்வு இல்லை
மின்சார வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகருவதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபாடு, அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். உலகளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே மின்சார வாகனங்களை ஊக்குவிக்க உலக நாடுகள் முடிவெடுத்து அதற்கேற்ப, தங்களின் ஆட்டோ மொபைல் திட்டங்களை வகுத்து வருகின்றன. மின்சார வாகனங்களில் இருந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்த புகையும் வெளியேறாது. பூஜ்ஜிய மாசு உமிழ்வு என்பதால், இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் இருக்கின்றன.