சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் நஸ்ரூதின் ஷா! நீங்கள் எப்போது இதைச் செய்வீர்கள்?

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் நஸ்ரூதின் ஷா! நீங்கள் எப்போது இதைச் செய்வீர்கள்?
(FILE)
  • Share this:
இந்த உலகம் வேகமாக மாறிவருகிறது. வாழ்வின் அனைத்து விதமான பகுதிகளிலும் அபரிதமான முன்னேற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. ஆனால், மனித இனம் மட்டும் தனது அடிப்படை நற்பண்புகளை இழந்து, மனிதாபிமானம் மறக்க தொடங்கியுள்ளது. காரணம், நமது அவசர கதியான வாழ்க்கைதான். அதிலும் குறிப்பாக, ஒரு சாலை விபத்தை நாம் காண நேரிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கூட செய்ய முடியாமல், கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்.

அதேசமயம், சாலை விபத்து ஏற்பட்டால் அதை வேடிக்கை பார்க்கவே பலர் கூடுகிறார்களே தவிர, யாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற உண்மை அக்கறை கிடையாது. இதில் கொடுமை என்னவெனில், மிக கொடூரமான ஒரு சாலை விபத்து நடந்தால், அதனை உடனே தங்களது ஸ்மார்ட்ஃபோனில் படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பகிரத்தான் பலரும் அக்கறை காட்டுகிறார்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து முதலுதவி செய்யவோ அல்லது ஆம்புலன்ஸை அழைக்கவோ யாரும் கவனம் செலுத்துவதில்லை.

இந்நிலையை மாற்றி, ஒரு விபத்து ஏற்பட்டு முதல் 60 நிமிடங்களில் எப்படி செயல்பட்டால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்புதிய முயற்சியை மேற்கொள்கிறோம். முன்னணி நடிகரும், இயக்குனருமான நஸ்ரூதின் ஷா, இந்த முயற்சிக்காக தனது ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் அளித்திருக்கிறார். இந்தியா முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 18 சாலை விபத்துகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி விபத்தில் பாதிக்கப்படுபவர்களை முதல் 60 நிமிடங்களுக்குள் விரைந்து செயல்பட்டு காப்பாற்றும்படி நஸ்ரூதின் ஷா வலியுறுத்துகிறார்.


பொன்னான நேரம்

இதில் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் - ஒரு விபத்து ஏற்படுகிறது எனில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஒரு மணிநேரம் பொன்னான நேரமாகும். அந்த பொன்னான நேரத்தில் சரியான மருத்துவ உதவி கிடைத்தால், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை எளிதில் காப்பாற்ற முடியும்.

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடியாக அவ்வழியே வருவோர் செய்யும் முதல் உதவி அவர்களின் உயிரை காப்பாற்ற உதவுகிறது என்பதைவிட, விபத்துக் காயத்தின் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு உதவ ஏன் மக்கள் தயங்குகிறார்கள்?

• ஆம்புலன்ஸ் வரும் வரை விபத்தில் காயம்பட்டவர்களை எப்படி பாதுகாப்பது என்ற விவரம் அவர்களுக்குத் தெரியாது. காயம்பட்டவரை புரட்டிப் போடுவதால் அல்லது நகர்த்துவதால் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் பலரும் விபத்து நடந்ததும் உதவி செய்ய முன்வராமல் தயங்கி நிற்கிறார்கள்.

• விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நேரிட்டால் அடிக்கடி போலீஸ் மற்றும் மருத்துவமனைக்குச் சென்று விளக்கம் அளிக்க நேரிடும் என்ற பயம்.

• நேரம் காலம் பார்க்காமல் போலீஸ் நமது தனிப்பட்ட வாழ்வில் தலையிட நேரிடும். இதனால், வேலை மற்றும் அந்தரங்க வாழ்க்கை பாதிக்கப்படலாம் என நினைத்தே பலரும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில்லை. இந்நிலையை மாற்றவே, டெல்லி அரசு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்தால் ரூ.2000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

• போலீஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் மற்றும் சாட்சியம் அளிக்க நேரிடும்.

• ஒரு விபத்து வழக்கு தொடரப்பட்டால், காயம்பட்டவர்களுக்கு உதவியவர் என்ற முறையில் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ஒரு சாலை விபத்து நிகழ்ந்து முதல் 60 நிமிடங்களுக்கு ஒருவரின் உயிரை எப்படி பாதுகாக்கலாம்?

• 108 எண்ணை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி கேட்கலாம்.

• 100 எண்ணை தொடர்புகொண்டு விபத்து நடந்த பகுதி எந்த இடம் என்பதை போலீசாரிடம் தெரிவிக்கலாம்

• 1033 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டணமில்லா 1033 அழைப்பு எண்ணை கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தயங்காமல் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து பற்றி இந்த எண்ணை தொடர்புகொண்டு உடனே தகவல் தெரிவிக்கலாம். அதற்கேற்ப, உடனடியாக உதவிகளுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

• விபத்திற்குள்ளான நபரின் மொபைல் ஃபோனை எடுத்து, அதில் உள்ள எண்களின் அடிப்படையில் அவரது குடும்பம், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த ஃபோன் லாக் செய்யப்பட்டிருந்தாலும், ஐசிஈ எனப்படும் அவசர முறையின்கீழ், ஹோம் ஸ்கிரினிலேயே அதில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களின் விவரத்தை பார்க்க முடியும்.

• விபத்திற்குள்ளானவரை சுற்றி நிற்கும் கும்பலை முதலில் விலகி நிற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான், காற்றோட்டம் ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். சுவாசம் எளிதாகும்.

• விபத்தை வேடிக்கை பார்க்க எல்லோரும் வாகனத்தை நிறுத்தினால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, பொதுமக்களில் சிலரை அறிவுறுத்தி, அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் நிற்காமல் போகச் செய்ய வேண்டும்.

• சாலையின் வலதுபுற பகுதி போக்குவரத்து நெரிசலின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், ஆம்புலன்ஸ் விரைவாக வந்து சேர முடியும். எனவே, விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களை இடதுபுறமாக நிற்காமல் செல்லும்படி அறிவுறுத்த வேண்டும்.

• விபத்திற்குள்ளான நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார் எனில், அவரை தொந்தரவு செய்யாமல் மென்மையான முறையில் ஹெல்மெட் பட்டைகளை கழற்றி விடுங்கள் அல்லது முடிந்தால் ஹெல்மெட்டை அப்புறப்படுத்துங்கள்.

• விபத்திற்குள்ளானவரின் கழுத்து, மார்பு மற்றும் இடுப்புப் பகுதியில் ஆடையை தளர்வு செய்யுங்கள். முதல் உதவி பற்றி தெரிந்தால் மட்டும் முதல் உதவி செய்யுங்கள். இல்லை எனில், மருத்துவர்கள் அல்லது யாரேனும் நிபுணர்கள் வரும் வரை காத்திருப்பதே நல்லது.

• விபத்திற்குள்ளானவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டால், காயம் பட்ட பகுதியில் ஏதேனும் கண்ணாடி, இரும்பு துகள் குத்தியுள்ளதா என ஒருமுறை சோதித்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் சிக்கியிருந்தால், அதனை வெளியே எடுக்க வேண்டாம், அப்படியே விட்டுவிடுங்கள், அதை அகற்றினால் ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் பாதிப்படைய நேரிடும்.

• காயம்பட்ட இடத்தில் ரத்தக்கசிவை தடுக்க, ஒரு சுத்தமான துணியை இறுக்கிக் கட்டுங்கள்.

• கால்களில் ரத்தம் கசிந்தால், கால்களை சற்று உயர்த்தி வையுங்கள், அதன்மூலமாக, ரத்தக்கசிவு குறைந்துவிடும்.

• விபத்திற்குள்ளான நபரின் வாயில் இருந்து ரத்தம் கசிந்தாலோ அல்லது வாந்தி எடுக்க நேரிட்டாலோ அவரை இருக்கும் நிலையில் இருந்து திருப்பி படுக்க வைக்கவும். இதன்மூலமாக, அடைப்புகள் ஏற்படாமல் குறைக்கலாம்.

• காயம்பட்ட இடத்தில் கை வைத்து, அந்த காயத்தின் இருபுறமும் மென்மையாக அழுத்தி விடுங்கள். இதன்மூலமாக, காயத்தின் வாய்ப்பகுதி குறைந்து, ரத்தக்கசிவு குறைய நேரிடும். ரத்தப் போக்கால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.

• ஒருவேளை, விபத்திற்குள்ளானவர் கடுமையான காயம்பட்டிருந்தால், சற்றும் யோசிக்காமல், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மேல்சிகிச்சைக்கு அனுமதிப்பது நலம். இதன்மூலமாக, விபத்து ஏற்பட்ட உடனே உரிய மருத்துவ சிகிச்சை கிடைத்து, அவர் உயிர் பிழைக்கவும் நேரிடும்.

முடிவு

நீங்கள் ஒரு உயிர் காக்கும் மனிதராக, ஒரு நல்ல குடிமகனாக சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை அச்சம் மற்றும் பரிதவிப்பு காரணமாக கைவிட்டுவிடாதீர்கள். கடந்த 2016ம் ஆண்டே குட் சாமரிட்டன் பில் என்ற மசோதாவை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்பேரில், உச்ச நீதிமன்றமும் குட் சாமரிட்டன் சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விபத்திற்குள்ளான நபருக்கு உதவி செய்யும் நபர்கள் எவ்வித சட்ட சிக்கலுக்கும், போலீஸ் தொந்தரவுக்கும் ஆளாகாமல் தடுக்க முடியும்.

உங்களின் மனிதாபிமான சிந்தனைக்கு ஒரு வழி ஏற்படுத்தி கொடுங்கள், உங்களை போன்றவர்களின் உள்ளே ஒளிந்திருக்கும் ஹீரோ வெளியே வந்து, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால்தான், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

இந்த முயற்சி நெட்வொர்க் 18 மற்றும் டியாஜியோ ஆதரவை பெற்றதாகும். இந்த வீடியோவை பார்த்து போதிய விழிப்புணர்வு பெற்றிடுங்கள், சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திட சரியான விசயத்தை செய்திடுங்கள்.First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்