கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களின் அளவில்லாத நம்பகத்தன்மையையும் பெற்றுள்ளது. 2020ம் ஆண்டு நிதியாண்டின் படி 4.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் கார்களை விற்பனை செய்து வருகிறது.
கார் விற்பனை டாப் கியரில் போய்கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவ்வப்போது கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. நீங்கள் டாடா மோட்டார்ஸ் காரை வாங்க விரும்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வழங்கி வரும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிந்து கொள்ளுங்கள்.
1. டாடா ஹாரியர்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த இரண்டாவது காரான இது, டிசைன், ஸ்ட்ராங்கான கட்டமைப்பு, சிறந்த சவாரி, நேர்த்தியான கையாளும் திறன், விசாலமான இருக்கை வசதிகளைக் கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் நம்பர் ஒன் சாய்ஸாக மாறியுள்ளது. இந்த எஸ்யூவி மாடல் காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி உடன் அனைத்து வகைகளுக்கும் ரூ.65,000 வரை சலுகைகளை வழங்குகிறது. கூடுதலாக கார்ப்பரேட் சலுகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
2.டாடா சஃபாரி:
டாடா சஃபாரி கார்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது. சஃபாரி கார்கள் பார்க்க ஹாரியர் போலவே காட்சியளித்தாலும், தாராளமான 3 வரிசை இருக்கைகள் இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. டாடா சஃபாரி காரை வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் சலுகையாக ரூ.20 ஆயிரமும், எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
Also Read : உலகின் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார் ரூ.11,000 கோடிக்கு விற்பனை!
3. டாடா டியாகோ:
டாடா டியாகோ ஹேட்ஸ்பேக் கார் சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள், எளிமையான கையாளும் திறன் ஆகிய வசதிகளும் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது. டியோகோவின் XE, XM மற்றும் XT மாடல்கள் மீது ரூ.21,500 வரை தள்ளுபடி கிடைக்கும். XZ மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் வகை கார்களுக்கு 31,500 ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட CNG-ஆல் இயங்கும் Tiago க்கு தள்ளுபடிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. டாடா டிகோர் :
டாடா டிகோர் வாகனம் பல ரகங்களில் கிடைக்கிறது. இது காம்பாக்ட் ரக காராக உள்ளது. சந்தையில் மிக சிறந்த மாடலாக உள்ளது. இது முதல் முறையாக கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக அமையலாம். தற்போது சிஎன்ஜி வகை கார்கள் தவிர, 25,000 ரூபாய் வரையில் தள்ளுபடி கிடைக்கும். டிகோரின் குறைந்த வகைகளான XE மற்றும் XM ஆகியவற்றிற்கு ரூ.21,500 வரையிலும், XZ மற்றும் அதற்கு மேற்பட்ட வகைகள் ரூ. 10,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
5. டாடா நெக்ஸான்:
டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக நெக்ஸான் திகழ்கிறது. டாடா மோட்டார் நிறுவனம் தனது போட்டியாளர்களான மஹிந்திரா XUV500, கியா சோனெட்மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற சிறிய ரக எஸ்யூவிக்கு போட்டியாக நெக்ஸான் களமிறக்கப்பட்டது. மார்ச் 2022 இல் 14,315 யூனிட் விற்பனையுடன் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது.
நெக்ஸான் ஸ்போர்ட்டி டிசைன், ஸ்மூத் சவாரி, மற்றும் வசதியான கேபின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கார் 120எச்.பி. பவர் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 110 எச்.பி. 1.5 லிட்டர் டீசல் என இரண்டு வகையான எஞ்சின் தேர்வுகளை கொண்டுள்ளது. பெட்ரோல் வகை எஸ்யூவிக்கு 6 ரூபாய் வரையிலும், டீசல் எஸ்யூவிக்கும் 10 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.