கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விற்பனையானது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மக்களின் தேவைக்கேற்ப இதன் உற்பத்தி அளவும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இருப்பினும் இது போன்று அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்தி வருவதால் காற்று மாசு போன்ற பாதிப்புகள் பெருகி வரக்கூடும். எனவே இதற்கு மாற்று வழியாக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.
மக்களின் இந்த தேவையை அறிந்து கொண்டு தான் பல நிறுவனங்களும் எலெக்ட்டிக் வாகனங்களின் உற்பத்தியை தொடங்கி உள்ளன. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த வகையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வகை வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்று வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தைப் பங்கை மார்ச் மாதத்தில் 353 சதவீத விற்பனையை எட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் விற்ற மொத்த 42,293 வாகனங்களில் நெக்ஸான் எலெக்ட்ரிக் வாகனமும், டைகோர் எலெக்ட்ரிக் வாகனமும் அதிக அளவில் விற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, டாடா மோட்டார்ஸ் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 2,43,459 வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா இது குறித்து கூறுகையில், “டாட்டா மோட்டார்ஸ் ஒரு சவாலான ஆண்டில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. வலுவான தேவை மற்றும் சப்ளை தரப்பில் எடுக்கப்பட்ட சுறுசுறுப்பான முடிவுகளின் மூலம் எங்களால் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வருடாந்திர, காலாண்டு மற்றும் மாதாந்திர விற்பனையை பெற முடிந்தது." என்று தெரிவித்தார். 2021 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 67 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் 370,372 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
“எலக்ட்ரானிக் சார்ந்த விஷயங்களில் சில பற்றாக்குறை இருந்தபோதிலும், நாங்கள் அதை சரிசெய்து எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 123,051 வாகனங்களை பதிவு செய்துள்ளோம். மார்ச் 2021'இல் 43% வளர்ச்சியுடன் 42,293 யூனிட் வாகனங்களை விற்று இந்த நிதியாண்டை முடித்தோம்," என்று சந்திரா கூறினார்.
Also Read : எலெக்ட்ரிக் வாகனம் குறித்த புதிய கான்செப்டை வெளியிடுகிறது டாடா
"வளர்ந்து வரும் சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களைத் தொடர்ந்து நிறைவேற்ற எங்களின் சுறுசுறுப்பான, தொலைநோக்கு அணுகுமுறையை சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இது போன்ற பல சாதனைகளை எங்களால் படைக்க முடியும் ”என்றும் சந்திரா மேலும் கூறினார். டாடா மோட்டார்ஸ் கடந்த 12 மாதங்களில் 29,559 யூனிட் எலெக்ட்ரிக் வகை வாகனங்களை விற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையானது இம்முறை அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.