டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களின் (electric vehicles - EV) வருடாந்திர உற்பத்தியை 80,000 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை கொண்டுள்ளதாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த இலக்கை பற்றி அறிந்த நெருங்கிய வட்டாரங்கள், அது குறித்த தகவல்களை ராய்ட்டர்ஸிடம் பகிர்ந்துள்ளன.
நினைவூட்டும் வண்ணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் உருவாக்கி விற்பனை செய்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை - 19,000 ஆகும். ஒப்பீட்டளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ள "80,000 யூனிட்களுக்கு மேல்" என்கிற எண்ணிக்கை மிகவும் தீவிரமான ஒரு இலக்கு ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதுகுறித்து கேட்டறிய முற்பட்ட போது, இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான டாடா, அதன் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது, ஆனால் தேவையை மிஞ்சும் விநியோகத்துடன் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் டார்கெட் -ஐ வெளிப்படுத்திய வட்டாரங்கள் ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் தத்தம் அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை. ஆக இந்த தகவல் எந்தளவு துல்லியமானது என்பதில் நமக்கு போதுமான ஆதாரங்கள் கிடையாது.
குறிப்பிடத்தக்க வண்ணம் டாடா நிறுவனம், கடந்த ஆண்டு மார்ச் 2026 க்குள் 10 இவி மாடல்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. மேலும் புதிய வாகன கட்டமைப்பு, தொடர்புடைய தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடும் செய்துள்ளது. டாடா , இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் 90% பங்கு வகிக்கிறது - இது நாட்டின் வருடாந்திர விற்பனையான சுமார் 3 மில்லியன் வாகனங்களில் 1% மட்டுமே ஆகும்.
இதுதவிர்த்து, வருகிற வெள்ளிக்கிழமை, டாடா தனது முதல் இவி பிளாட்ஃபார்மில் உருவாக்க திட்டமிட்டுள்ள ஒரு கான்செப்ட் காரை வெளியிடுகிறது. ப்யூர் இவி ஆர்க்கிடெக்சர் (Pure EV architecture) என்று அழைக்கப்படும் இந்த பிளாட்ஃபார்மில் பில்ட் செய்யப்படும் கார்கள் உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தனது வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய பிளாட்ஃபார்ம் ஆனது டாடாவின் மின்மயமாக்கல் திட்டங்களின் மூன்றாம் கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் இது கடந்த ஆண்டு, தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி-யின் (TPG) 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டால் ஊக்கம் பெற்றது.
முதல் கட்டமாக இரண்டு இவி-க்கள் (அதில் ஒன்று நெக்ஸான் எஸ்யுவு) அறிமுகப்படுத்தப்பட்டது, அவை ஏற்கனவே உள்ள கம்பஷன் எஞ்சின் பிளாட்ஃபார்ம்-ஐ பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
இரண்டாவது கட்டத்தில், பெரிய பேட்டரிகள் மற்றும் நீண்ட டிரைவிங் ரேன்ஜுகளை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க, கம்பஷன் எஞ்சின் பிளாட்ஃபார்ம்-ஐ மாற்றியமைக்கும் தேவை உள்ளது. அப்படியான கார்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் தனிப்பட்ட இலக்குகள் ஒருபக்கம் இருக்க, கார்பன் குறைப்பின் (carbon reduction) கீழ், இந்திய அரசாங்கமும் சில இலக்குகளை கொண்டுள்ளது. அதன்கீழ், உள்நாட்டில் மின்சார கார்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உருவாக்க நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஊக்கத்தொகையாக வழங்குகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், மொத்த கார் விற்பனையில் 30% மின்சார மாடல்களை உருவாக்க வேண்டும் என்றும் இந்திய அரசு விரும்புகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TATA, Tata motors